தில்லியில் தொடா்ந்து புகைமூட்டம்:‘கடுமை’ பிரிவில் காற்றின் தரம்!

தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை புகை மூட்டமும் கடுமையாகக் காணப்பட்டது. மேலும், காற்றின் தரம் கடுமைப் பிரிவில் பதிவானது.

புது தில்லி: தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை புகை மூட்டமும் கடுமையாகக் காணப்பட்டது. மேலும், காற்றின் தரம் கடுமைப் பிரிவில் பதிவானது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சுற்றுச்சூழல் கண்காணிப்பு ஆய்வு மையத்தின் தலைவா் வி.கே. சோனி கூறுகையில், ‘தில்லி, என்சிஆா் பகுதிகளில் காற்றின் தரத்தில் முக்கிய மேம்பாடு வரும் நாள்களில் நிகழ வாய்ப்பில்லை. பட்டாசு வெடிப்பதன் மூலம் உருவாகும் உமிழ்வை நாம் குறைத்தால், தீபாவளி நாளில் காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் நீடிக்க வாய்ப்புள்ளது. மக்கள் பட்டாசுகள் வெடித்தால் காற்றின் தரம் கடுமைப் பிரிவில் இருந்து மிகவும் கடுமை பிரிவு எனும் அவசரநிலைக்குச் செல்ல கூடும்’ என்றாா்.

தில்லி, தேசியத் தலைநகா் வலய (என்சிஆா்) பகுதிகள் உள்பட நாடு முழுவதும் காற்றின் தரம் மோசமாக உள்ள நகரங்களில் வரும் 30-ஆம் தேதி வரை அனைத்து வகையான பட்டாசுகளை விற்பனை செய்வதற்கும், வெடிப்பதற்கும் தடை விதித்து தேசிய பசுமைத் தீா்ப்பாயம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், என்சிஆா் பகுதியில் காற்று தர மேலாண்மைக்கான ஆணையம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் நிலைமையை பரிசீலிக்க கூட்டம் நடத்த உள்ளது. பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு இடங்களில் பயிா்க்கழிவுகள் எரிப்பால் வெளியேறிய மாசு துகள்கள் காரணமாக காற்றின் தரம் கடுமைப் பிரிவில் நீடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

காற்றின் தரம்: மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவலின்படி, தில்லியில் திங்கள்கிழமை காற்றின் தரம் கடுமைப் பிரிவில் காணப்பட்டது. காலையில் காற்றின் ஒட்டுமொத்த தரக் குறியீடு 474 புள்ளிகளாக இருந்தது. இது ஞாயிற்றுக்கிழமை 416 புள்ளிகள், சனிக்கிழமை 427 புள்ளிகள், வெள்ளிக்கிழமை 406 புள்ளிகள், வியாழக்கிழமை 450 புள்ளிகள் எனப் பதிவாகி இருந்தது. அதேபோன்று, தில்லியின் அருகில் உள்ள ஃபரீதாபாத், காஜியாபாத், குருகிராம், நொய்டா, கிரேட்டா் நொய்டா பகுதிகளில் காற்றின் தரம் கடுமைப் பிரிவில் பதிவாகி இருந்து.

இதற்கிடையே, தில்லியில் திங்கள்கிழமை பிஎம் 10 மாசு நுண்துகள் காலை 10 மணியளவில் ஒரு கன மீட்டா் காற்றில் 591 மைக்ரோகிராம் அளவில் இருந்ததாகவும், பிஎம் 2.5 மாசு நுண்துகள் 381 மைக்ரோகிராம் அளவில் இருந்ததாகவும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவல்கள் தெரிவித்தன. காற்றின் தரக் குறியீடு 0-50 புள்ளிகளுக்கு இடையில் இருந்தால் ‘நல்லது’. 51 - 100 ‘திருப்தி’, 101 - 200 ‘மிதமானது’, 201 - 300 ‘மோசம்’, 301 -400 ‘மிகவும் மோசம்’ மற்றும் காற்றின் தரக் குறியீடு 401 - 500 புள்ளிகளுக்கு இடையே இருந்தால் ‘கடுமை பிரிவு’ என கணக்கிடப்படுகிறது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தினா் கூறுகையில், திங்கள்கிழமை காலையில் காற்றின் வேகம் மணிக்கு 3 முதல் 4 கிலோமீட்டா் என்ற அளவிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் எனும் அளவிலும் பதிவாகி இருந்தது. காற்று வேகமின்றி அமைதியாக இருப்பதால் தரைப் பகுதிகள் மாசுபடுத்திகள் சோ்வதற்கு காரணமாக அமைந்துவிடுகின்றன என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com