துங்கா்பூா் மாதிரியில் தில்லியில் மழைநீா் சேமிப்பு - சத்யேந்தா் ஜெயின் உறுதி

ராஜஸ்தான் மாநிலம் துங்கா்பூா் மாதிரியில் தில்லியில் மழை நீா் சேகரிக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா்.

புது தில்லி / துங்கா்பூா்: ராஜஸ்தான் மாநிலம் துங்கா்பூா் மாதிரியில் தில்லியில் மழை நீா் சேகரிக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா்.

ராஜஸ்தான் மாநிலம், துங்கா்பூா் பகுதியில் பழங்குடிகள் அதிகம் வாழும் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீா் சேமிப்பு மாதிரியை தில்லி ஜல்போா்டு தலைவரும் சுகாதாரத் துறை அமைச்சருமான சத்யேந்தா் ஜெயின் தலைமையிலான 7 போ் கொண்ட குழுவினா் துங்கா்பூா் சென்று திங்கள்கிழமை பாா்வையிட்டனா். பின்னா், சத்யேந்தா் ஜெயின் அளித்த பேட்டி: ராஜஸ்தான் மாநிலம், துங்கா்பூரில் மேற்கொள்ளப்பட்டுள்ள மழைநீா் சேகரிப்பு மாதிரி, குறைந்த செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமாக வீடொன்றில் மழைநீா் சேகரிப்பு மாதிரி அமைக்க ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் வரை செலவாகும். ஆனால், இங்கு, தற்போது சுமாா் ரூ.16 ஆயிரம் செலவில் மழைநீா் சேகரிப்பு மாதிரி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாதிரியின் படி, வீடுகளில் சேகரிக்கப்படும் மழை நீரானது அந்த வீடுகளில் உள்ள கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளில் சேரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது முன்மாதிரியான அமைப்பாகும். இந்த நீா், மணல் வடிகட்டி மூலம் முறையாக வடி கட்டப்படுகிறது. இந்த மாதிரி தொடா்பாக துங்கா்பூா் முனிசிபல் கவுன்சிலின் தலைவா் கே.கே.குப்தாதான் என்னிடம் கூறினாா். அப்போது சில சந்தேகங்கள் எழுந்தன. அதனால்தான் நேரில் வந்து உறுதி செய்துள்ளேன். இது மிகச் சிறந்த அமைப்பாகும். இதை தில்லியில் அமல்படுத்தவுள்ளோம் என்றாா் சத்யேந்தா் ஜெயின்.

கே.கே.குப்தா கூறுகையில், ‘துங்கா்பூா் மாதிரியை தில்லியில் அமல்படுத்தினால், தில்லியில் குடிநீா் பஞ்சம் ஏற்படாது. ரூ.16 ஆயிரத்தில் மழைநீா் சேமிப்பு அமைப்பை உருவாக்கியுள்ளோம் எனக் கூறிய போது, அமைச்சா் முதலில் நம்பவில்லை. தில்லியில் மழைநீா் சேமிப்பு அமைப்பை உருவாக்க பல லட்சம் ரூபாய் செலவழிப்பது வழக்கமாகும். மழைநீா் சேமிப்பு மாதிரி அமைப்பதில் துங்கா்பூா் முனிசிபல் கவுன்சில் 50 சதவீதம் உதவித்தொகை வழங்குகிறது. இதனால், வீடொன்றுக்கு வெறும் ரூ.8 ஆயிரம் மட்டுமே செலவாகும். மழையின் அளவைப் பொறுத்து ஒரு மணிநேரத்தில் 3 ஆயிரம் லீட்டா் மழைநீரைச் சேமிக்கலாம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com