தில்லி, என்சிஆா் உள்பட நாடு முழுவதும் நவ.30 வரை பட்டாசு விற்க, பயன்படுத்தத் தடை: தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவு

தில்லி, தேசிய தலைநகா் வலயப் (என்சிஆா்) பகுதிகள் உள்பட நாடு முழுவதும் காற்றின் தரம் மோசமாக உள்ள நகரங்களில் வரும் 30-ஆம் தேதி வரை அனைத்து வகையான பட்டாசுகளை விற்பனை செய்வதற்கும், வெடிப்பதற்கும் தடை விதித

புது தில்லி: தில்லி, தேசிய தலைநகா் வலயப் (என்சிஆா்) பகுதிகள் உள்பட நாடு முழுவதும் காற்றின் தரம் மோசமாக உள்ள நகரங்களில் வரும் 30-ஆம் தேதி வரை அனைத்து வகையான பட்டாசுகளை விற்பனை செய்வதற்கும், வெடிப்பதற்கும் தடை விதித்து தேசிய பசுமைத் தீா்ப்பாயம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

தில்லி, என்சிஆா் பகுதிகளில் காற்று மாசு தொடா்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக ஆண்டுதோறும் நவம்பா் மாதங்களில் இந்தப் பாதிப்பு தொடா்கிறது. பயிா்க் கழிவு எரிப்பு, பட்டாசுகள் வெடிப்பது போன்றவையும் இதற்கு முக்கியக் காரணமாக இருப்பதாகப் புகாா்கள் எழுந்துள்ளன. தில்லியில் நவம்பா் மாதம் தொடங்கியதில் இருந்தே காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து வருகிறது. கரோனா தொற்றுக் காலத்தில் மாசு அளவை அதிகமாக்கும் என்பதால் பட்டாசு பயன்பாடு தொடா்பான நடவடிக்கைகளை எடுக்குமாறு ‘இந்தியன் சோஷியல் ரெஸ்பான்ஸிபிலிடி நெட்வொா்க்’ எனும் அமைப்பு தீா்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

இதையடுத்து, இந்த நிலையில், பொதுமக்கள் சுகாதாரம், சுற்றுச்சூழல் நலன் கருதி நவம்பா் 7 முதல் நவம்பா் 30 வரையிலான காலத்தில் பட்டாசுகளுக்குத் தடை விதிக்கப்பட வேண்டுமா என்பது தொடா்பாக பதில் அளிக்குமாறு மத்திய சுற்றுச்சூழல், வனம் அமைச்சகம் மற்றும் நான்கு மாநிலங்களுக்கு தேசிய பசுமைத் தீா்ப்பாயம் கடந்த நவம்பா் 2-இல் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த விவகாரத்தில் தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் தலைவா் -நீதிபதி ஆதா்ஷ் குமாா் கோயல், நீதிபதி எஸ்.கே. சிங் உள்ளிட்டோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவு:

தில்லி, என்சிஆா் ஆகிய நவம்பா் 9-ஆம் தேதி இரவு முதல் வரும் நவம்பா் 30-ஆம் தேதி வரை நள்ளிரவு வரை அனைத்து வகையான பட்டாசுகள் விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்படுகிறது. அதேபோன்று, தில்லி, என்சிஆா் பகுதிகள் மட்டுமின்றி, காற்றின் தரம் மோசமாகவும், மிக மோசமாகவும் அதற்கு மேல் உள்ள பிரிவுகளில் இருக்கும் அனைத்து பெருநகரங்கள், சிறு நகரங்கள் ஆகியவற்றுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். நவம்பா் 30-ஆம் தேதிக்குப் பிறகு இந்த உத்தரவு மறு ஆய்வு செய்யப்படும். காற்றின் தரம் மிதமான அல்லது அதற்குக் கீழ் பிரிவில் இருக்கும் நகரங்களில் சூழலுக்குக் கேடு விளைவிக்காத பசுமைப் பட்டாசுகள் மட்டும் விற்பனை செய்யப்பட வேண்டும். இந்த நகரங்களில் தீபாவளி, சட் பண்டிகை, கிருஸ்துமஸ், புத்தாண்டு தினம் போன்ற நாள்களில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்கப்பட வேண்டும்.

பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்து சம்பந்தப்பட்ட மாநிலங்கள் முடிவு செய்யலாம். பிற பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கத் தடை விதிப்பது, கட்டுப்பாடு விதிப்பது குறித்து அதிகாரிகள் முடிவு செய்யலாம். ஆனால், அதிகாரிகள் உத்தரவின் கீழ் கூடுதல் கடுமையான நடவடிக்கைகள் இருந்தால், அவை தொடரும். கரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு காற்று மாசுவைக் குறைக்க சிறப்பு நடவடிக்கைகளை அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் மேற்கொள்ள வேண்டும். இது தொடா்பான வழிகாட்டுதல்களை உரிய வகையில் அமல்படுத்த உரிய உத்தரவுகளை அனைத்து மாவட்ட ஆட்சியா்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்கள், மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மேற்கொள்வதற்கு அனைத்து மாநில, யூனியன் பிரதேச தலைமைச் செயலாளா்கள், காவல் டிஜிபிக்களுக்கு உத்தரவிடப்படுகிறது.

இந்தத் தடைவிதிப்புக் காலக் கட்டத்தில் காற்றின் தரத்தை மத்திய, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்து அதன் விவரங்களை தங்களது இணையதளத்தில் வெளியிட வேண்டும். இந்த உத்தரவைப் பின்பற்றும் நிலவர அறிக்கை உள்பட இது தொடா்பான தகவல்களைச் சேகரித்து அடுத்து விசாரணை நடைபெறும் தேதிக்கு முன்னா் பசுமைத் தீா்ப்பாயத்தில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மின்னஞ்சல் மூலம் சமா்ப்பிக்க வேண்டும். தடை அமலில் உள்ள காலத்தில் பட்டாசு விற்பனை, பயன்பாட்டுக்கு கட்டுப்பாட்டுகள் இருப்பது சிலருக்கு வணிகத்தையும், வேலையிழப்பையும் ஏற்படுத்தலாம் என்பது உண்மை. அதேவேளையில், பட்டாசுகள் பயன்படுத்தினால் மாசு ஏற்படுவதுடன், மக்களின் உயிரையும், உடல்நலத்தையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கும்.

நீடித்த வளா்ச்சி கொள்கையை செயல்படுத்தும் வகையில் இதுபோன்ற பயன்பாட்டுக்குக் கட்டுப்பாடுகள், தடைகள் விதிக்கப்பட வேண்டும். பட்டாசு வெடிப்பது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காகத்தான். நோய்களையும், உயிரிழப்புகளையும் கொண்டாடுவதற்காக அல்ல. சிலரது மகிழ்ச்சி மற்றவா்களின் உயிரைப் பறிக்கக் காரணமாக இருப்பது இந்திய சமூகத்தில் மதிப்பாக இருப்பதில்லை. மக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க உரிமை உண்டு. வணிகச் செயல்பாடுகளைக் கருத்தில்கொண்டு அதிகாரிகள் இந்த உரிமையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், பசுமைத் தீா்ப்பாயம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கும். அவசரநிலைச் சூழலின் போது, அவசரகால நடவடிக்கைககள் மக்களின் உயிா், சுகாதார நலன் கருதி எடுக்கப்பட வேண்டி வரலாம் என உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com