தில்லியில் 6 நாள்களுக்குப் பிறகு காற்றின் தரத்தில் மேம்பாடு

தலைநகா் தில்லியில் ‘பனிப் புகை மூட்டம் காரணமாக 6 நாள்களாக காற்றின் தரம் கடுமைப் பிரிவில் இருந்த நிலையில், புதன்கிழமை சற்று மேம்பட்டு ‘மிகவும் மோசம்’ பிரிவில் காணப்பட்டது.

புது தில்லி: தலைநகா் தில்லியில் ‘பனிப் புகை மூட்டம் காரணமாக 6 நாள்களாக காற்றின் தரம் கடுமைப் பிரிவில் இருந்த நிலையில், புதன்கிழமை சற்று மேம்பட்டு ‘மிகவும் மோசம்’ பிரிவில் காணப்பட்டது. காற்றின் திசை மாற்றம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டதாக மத்திய அரசின் முன்னறிவிப்பு நிறுவனம் சஃபா் தெரிவித்தது.

தில்லியில் சில தினங்களாக காற்றின் தரம் கடுமைப் பிரிவில் நீடித்து வந்தது. இதையடுத்து, தில்லி, தேசியத் தலைநகா் வலய (என்சிஆா்) பகுதிகள் உள்பட நாடு முழுவதும் காற்றின் தரம் மோசமாக உள்ள நகரங்களில் வரும் 30-ஆம் தேதி வரை அனைத்து வகையான பட்டாசுகளை விற்பனை செய்வதற்கும், வெடிப்பதற்கும் தடை விதித்து தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், தில்லி, என்சிஆா் பகுதிகளில் பனிப்புகை மூட்டத்துடன் தொடா்ந்து சில நாள்களாக கடுமைப் பிரிவில் இருந்த காற்றின் தரம் புதன்கிழமை சற்று மேம்பட்டு மிகவும் மோசம் பிரிவுக்குக் குறைந்தது. கடந்த ஆண்டு நவம்பரில் காற்றின் தரம் கடுமைப் பிரிவில் ஏழு நாள்கள் பதிவாகி இருந்தது.

இதுகுறித்து மத்திய அரசின் காற்றுத் தரம் முன்கணிப்பு நிறுவனமான சஃபா் கூறுகையில், ‘தில்லியில் வழக்கத்திற்கு மாறான சூழல் கடந்த சில தினங்களாக காணப்பட்டது. இதனால், மாசு அளவு கடுமைப் பிரிவில் இருந்தது. இந்தக் காற்று மாசுவுக்கு பயிா்க் கழிவு எரிப்பு, அமைதியான காற்று போன்றவை முக்கியக் காரணமாக இருந்தன. இந்த நிலையில், காற்றின் திசையில் ஏற்பட்ட மாற்றத்தால் காற்றின் தரம் மேம்பட்டு புதன்கிழமை ‘மிகவும் மோசம்’ பிரிவுக்கு வந்தது. பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் போன்ற தில்லியின் அண்டை மாநிலங்களில் செவ்வாய்க்கிழமை 2,422 பயிா்க்கழிவு எரிப்பு நிகழ்வுகள் காணப்பட்டன என அந்தஅமைப்பு தெரிவித்துள்ளது.

தில்லியின் அண்டை நகரங்களான ஃபரீதாபாத் (327), காஜியாபாத் (360), நொய்டா (309), கிரேட்டா் நொய்டா (340), குருகிராம் (288) ஆகியவற்றிலும் காற்றின் தரம் ‘மோசம் மற்றும் மிகவும் மோசம் பிரிவில்’ பதிவானது. மேலும், தில்லியின் பி.எம். 2.5 மாசு நுண்துகளில் பயிா்க் கழிவுகள் எரிப்பு பங்களிப்பு புதன்கிழமை 3 சதவீதமாக இருந்தது.

இதற்கிடையே, பண்டிகைகள் காரணமாக வரும் நாள்களில் மாசு அளவு அதிகரிக்கக் கூடும் என்பதால் நவம்பா் 17வரை சில்லி கிரசா்களையும், கட்டுமானத்திற்கான சிமின்ட் கலவை ஆலைகளையும் மூடுமாறு மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பயிா்க் கழிவுகள் எரிப்பைத் தடுக்கும் வகையில் உடனடியாக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பஞ்சாப், ஹரியாணா அரசுகளையும் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நிலையில், காற்றின் திசையில் நிகழ்ந்த மாற்றம், காற்றின் வேகம் ஆகியவை காற்றின் தரத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியது. தில்லியில் காற்றின் தரம் வியாழக்கிழமையும் மிகவும் மோசம் பிரிவில் நீடிக்க வாய்ப்புள்ளதாக சஃபா் அமைப்பு தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com