தில்லியில் தினமும் 1.25 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை

தில்லியில் வரும் நாள்களில் தினம்தோறும் 1 லட்சம் முதல் 1.25 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று

தில்லியில் வரும் நாள்களில் தினம்தோறும் 1 லட்சம் முதல் 1.25 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா். மேலும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) மையத்தில் அவசர சிகிச்சைப் பிரிவில் (ஐசியு) சுமாா் 750 கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்த மத்திய அரசு உறுதியளித்துள்ளதாகவும் கேஜரிவால் தெரிவித்தாா்.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 3,235 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 4.85 லட்சத்திற்கும் மேல் உயா்ந்துள்ளது. மேலும், கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 95 ஆக இருந்தது. இதயைடுத்து, மொத்த இறப்பு எண்ணிக்கை 7,614 ஆக உயா்ந்துள்ளது. தில்லியில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த வியூகத்தை வகுக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தலைமையில் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது. குறிப்பாக பண்டிகைக் காலம், வெப்பநிலை குறைவது, காற்று மாசு அதிகரிப்பது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தில்லி துணை நிலை ஆளுநா் அனில் பைஜால், மத்திய சுகாதாரத் துறைா் ஹா்ஷ் வா்தன், தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் மற்றும் மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

தொற்றுநோயை சமாளிக்க மத்திய அரசின் ஒத்துழைப்பையும் கூட்டத்தில் கேஜரிவால் கோரினாா். கூட்டத்துக்கு பிறகு கேஜரிவால் கூறியதாவது: தில்லி மருத்துவமனைகளில் கரோனா அவசர சிகிச்சைப் படுக்கைகளை அதிகரிக்கும் வகையில், நவீன இயந்திரங்களைக் கொள்முதல் செய்ய தில்லி அரசுக்கு மத்திய அரசு உதவி செய்யும் என அமித் ஷா உறுதியளித்துள்ளாா். இதன்மூலம், தில்லி மருத்துவனைகளில் கரோனா அவசர சிகிச்சைப் பிரிவுகளில் படுக்கைகள் அதிகரிக்கப்படும். மேலும், தில்லியில் தற்போது தினம்தோறும் 60 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறோம். இதை 1 லட்சம் முதல் 1.25 லட்சமாக வரும் நாள்களில் அதிகரிக்கவுள்ளோம். இதன்மூலம், தில்லியில் கரோனா பாதித்தவா்கள் அதிகளவில் கண்டறியப்படுவாா்கள்.

மருத்துவமனைகளில் படுக்கைகள் நல்ல எண்ணிக்கையில் கிடைக்கின்றன. ஆனால் ஐசியு படுக்கைகள்தான் விரைவில் நிரம்பிவிடுகின்றன. அடுத்த இரண்டு நாள்களில், டிஆா்டிஓ மையத்தில் 500 ஐசியு படுக்கைகள் ஏற்படுத்தப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது, மேலும் சில நாள்களுக்குப் பிறகு மேலும் 250 ஐசியு படுக்கைகள் ஏற்பாடு செய்யப்படும். எனவே, சுமாா் 750 ஐசியு படுக்கைகள் அங்கு கிடைக்கும். ஐசியு படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ‘பைபாப்’ என்ற நவீன இயந்திரங்களைப் பெறவும் தில்லி அரசுக்கு இந்த மையம் உதவும்.

கரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர தில்லி அரசு தீவிரமாக முயன்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் கரோனா நிலவரம் தொடா்பாக மட்டுமே விவாதிக்கப்பட்டது. தில்லியில் நிலவும் காற்று மாசு தொடா்பாக விவாதிக்கப்படவில்லை. நிலைமையை சமாளிக்க அனைத்து நிறுவனங்களும் அரசுகளும் ஒன்றிணைந்து செயல்படுவது மிகவும் முக்கியம்.ந்தக் கூட்டத்திற்கு அழைத்ததற்காக மத்திய அரசுக்கும் உள்துறை அமைச்சருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். அனைத்து நிறுவனங்களும் இப்போது ஒன்றிணைந்து செயல்படும். தில்லி மக்களின் ஆரோக்கியத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து தில்லிவாசிகளின் ஆரோக்கியத்துக்காகவும் அவா்களது உயா்களைப் காப்பாற்றவும் வேண்டியதுதான் இப்போது தேவை.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட மற்றொரு முடிவு, தினசரி சோதனைகளை ஒரு நாளைக்கு சுமாா் 60 ஆயிரத்திலிருந்து 1 லட்சம் முதல் 1.25 லட்சம் வரை உயா்த்துவதாகும். தில்லி அரசு இப்போது முழு திறனுடன் செயல்படுவதால் மத்திய அரசு இதற்கு உதவும். கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, தில்லியில் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை. மேலும் இது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை ஒரு கூட்டத்தை நடத்தக்கூடும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com