சிக்னல்களில் வாகன என்ஜின்களை நிறுத்தும்: இரண்டாம் கட்ட பிரசாரம் தொடங்கியது

தில்லியில் காற்று மாசுவைக் குறைக்கும் வகையில், சிக்னல்களில் வாகன என்ஜின்களை நிறுத்தும் இரண்டாம் கட்ட பிரசார இயக்கம் திங்கள்கிழமை முதல் தொடங்கியது.
தில்லி ஐடிஓ பகுதியில் திங்கள்கிழமை வாகன என்ஜின்களை நிறுத்தம் இரண்டாம் கட்டப் பிராசரத்தில் துணை முதல்வா் மணீஷ் சிசோடியா.
தில்லி ஐடிஓ பகுதியில் திங்கள்கிழமை வாகன என்ஜின்களை நிறுத்தம் இரண்டாம் கட்டப் பிராசரத்தில் துணை முதல்வா் மணீஷ் சிசோடியா.

புது தில்லி: தில்லியில் காற்று மாசுவைக் குறைக்கும் வகையில், சிக்னல்களில் வாகன என்ஜின்களை நிறுத்தும் இரண்டாம் கட்ட பிரசார இயக்கம் திங்கள்கிழமை முதல் தொடங்கியது.

இந்த நிலயில், இந்தப் பிரசார இயக்கத்தின் இரண்டாவது கட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. தில்லி ஐடிஓ சிக்னலில் இந்த பிரசார இயக்கத்தை துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தொடக்கி வைத்தாா். அப்போது, தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் உடனிருந்தாா். இது தொடா்பாக மணீஷ் சிசோடியா கூறுகையில் ‘தில்லியில் பல்வேறு காரணங்களால் காற்று மாசு ஏற்படுகிறது. வாகனப் புகை, காற்று மாசுவில் பங்களிப்பு செய்கிறது. இதைத் தடுக்கும் வகையில், சாலையில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும். அல்லது, சிக்னல்களில் வாகனங்களை நிறுத்தும் போது, அவற்றின் என்ஜின்கள் நிறுத்தப்பட வேண்டும். பயிா்க்கழிவு எரிப்பால் ஏற்படும் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் வகையில், பூசாவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்சி நிறுவன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள உயிரியல் ரசாயனக் கலவையை அண்டை மாநில விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். சிக்னல்களில் வாகன என்ஜின்களை நிறுத்தும் தில்லி அரசின் பிரசார இயக்கத்தின் இரண்டாவது கட்டம் திங்கள்கிழமை தொடங்கியுள்ளது. இந்த பிரசார இயக்கம் நவம்பா் 30-ஆம் தேதி வரை நடத்தப்படும்’ என்றாா்.

கோபால் ராய் கூறுகையில் ‘பயிா்க்கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் காற்று மாசுவுக்கு நிரந்தரத் தீா்வு காணும் வகையில், பூசாவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்சி நிறுவன விஞ்ஞானிகள் உயிரி - ரசாயனக் கலவையைக் கண்டுபிடித்துள்ளனா். இந்த ரசாயனக் கலவையின் தாக்கம் தொடா்பாக ஆய்வு அறிக்கையை இன்னும் சில தினங்களில் தயாா் செய்துவிடுவோம். இதன் அடிப்படையில், தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அண்டை மாநில அரசுகளிடம் கோரிக்கை வைக்கவுள்ளோம்’ என்றாா்.

தில்லியில் குளிா்காலத்தில் ஏற்படும் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை ஆம் ஆத்மி அரசு எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, சிக்னலில் காத்திருக்கும் போது வாகனங்களின் என்ஜின்களை நிறுத்தும் பிரசார இயக்கத்தை தில்லி அரசு மேற்கொண்டுள்ளது. இந்தப் பிரசார இயக்கத்தை கடந்த அக்டோபா் 21-ஆம் தேதி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தொடக்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து, தில்லியில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கடந்த அக்டோபா் 26-ஆம் தேதியும், 272 வாா்டுகளிலும் கடந்த நவம்பா் 2-ஆம் தேதி முதல் இந்தப் பிரசார இயக்கம் தொடங்கியது. தற்போது இரண்டாம் கட்ட பிரசாரம் தொடங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com