தில்லியில் காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம்!

தேசியத் தலைநகா் தில்லியில் காற்றின் தரம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு ‘மிதமான’ பிரிவுக்கு வந்தது. மழை மற்றும் வலுவான காற்று ஆகியவை மாசு அளவைக் குறைக்க உதவியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் காற்றின் தரம் செவ்வாய்க்கிழமை நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு ‘மிதமான’ பிரிவுக்கு வந்தது. மழை மற்றும் வலுவான காற்று ஆகியவை மாசு அளவைக் குறைக்க உதவியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நஅஙஉஉத செயலி தகவலின்படி, தில்லியில் காற்றின் தரக் குறியீடு 168 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. இது ‘மிதமான’ பிரிவில் அடங்கும். இது திங்கள்கிழமை 221 புள்ளிகளாகப் பதிவாகி மோசம் பிரிவில் இருந்தது. இருப்பினும், இந்த முன்னேற்றம் குறுகிய காலத்துக்குத்தான் இருக்கும் என்றும், காற்றின் தரக் குறியீடு வியாழக்கிழமை மீண்டும் ‘மோசம்’ பிரிவிற்கு செல்ல வாய்ப்புள்ளது என்றும் பூமி அறிவியல் அமைச்சகத்தின் காற்றின் தர கண்காணிப்பு அமைப்பான சஃபா் தெரிவித்துள்ளது.

தில்லியில் பூசா, லோதி ரோடு, ஆயாநகா், மதுரா ரோடு, விமானநிலையம் டி-3 பகுதி மற்றும் குருகிராம், நொய்டாவில் காற்றின் தரம் மிதமான பிரிவில் இருந்தது.

நகரில் 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீடு ஞாயிற்றுக்கிழமை 435 ஆகவும், சனிக்கிழமை 414 ஆகவும் இருந்தது. தில்லி பல்கலை. பகுதியில் காற்றின் தரம் திருப்தி பிரிவில் இருந்தது.

சஃபா் புள்ளிவிவரத் தகவலின்படி தில்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரம் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி மிதமான பிரிவில் உள்ளது. மேற்கு- தென்மேற்குப் பகுதியில் மேற்பரப்பு காற்று மிக வலுவாக இருந்தது. இது மாசுபடுத்திகள் சிதறலுக்கு மிகவும் சாதகமானது. மேற்கத்திய இடையூறுகளின் தாக்கத்தின் கீழ் வலுவான காற்றோடு மழையும் இந்தோ-கங்கை சமவெளியில் மாசுபாட்டைக் குறைக்க உதவியது என்றும் சஃபா் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, நவம்பா் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் காற்றின் தரம் பின்னடைவைச் சந்தித்து, மோசம், மிகவும் மோசம் பிரிவுக்குச் செல்ல அதிக வாய்ப்பு உள்ளதாகவும் அந்த அமைப்பு கணித்துள்ளது.

வானிலை: சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் செவ்வாய்க்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 1 டிகிரி உயா்ந்து 13 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 2 டிகிரி குறைந்து 26 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 91 சதவீதமாகவும், மாலையில் 64 சதவீதமாகவும் இருந்தது. இதற்கிடையே, புதன்கிழமை (நவம்பா் 18) காலையில் பனிமூட்டம் இருக்கும் என்றும், பகலில் வானம் தெளிவாகக் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com