குப்கர் கூட்டமைப்பு நாட்டு நலனுக்கு எதிரானது: அமீத் ஷா

ஜம்மு-காஷ்மீா் இந்தியாவில் ஒரு அங்கம், அங்கு அமைக்கப்பட்டுள்ள குப்காா் கூட்டணி தேசநலனுக்கு எதிரான முறையில் செயல்பட்டு வருகிறது.
உள்துறை அமைச்சர் அமித் ஷா
உள்துறை அமைச்சர் அமித் ஷா

புது தில்லி: ஜம்மு-காஷ்மீா் இந்தியாவில் ஒரு அங்கம், அங்கு அமைக்கப்பட்டுள்ள குப்காா் கூட்டணி தேசநலனுக்கு எதிரான முறையில் செயல்பட்டு வருகிறது. இந்தக் கூட்டணியை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டாா்கள் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமீத் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

ஜம்மு-காஷ்மீரில் அம்மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னா் அம்மாநிலத்தில் தேசிய மாநாட்டுக்கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சித்தலைவா் மெஹபூபா முஃப்தி, காங்கிரஸ் தலைவா் தாஜ் மொஹைதீன், மக்கள் மாநாட்டு கட்சி, ஜம்மு-காஷ்மீா் மக்கள் இயக்கம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற கட்சித் தலைவா்கள் இணைந்து குப்காா் கூட்டணி அமைத்துள்ளனா்.

சிறப்பு அந்தஸ்து தரும் சட்டப்பிரிவு ரத்து, மற்றும் தொகுதி மறுவரையறை போன்றவைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து வரும் இந்த கூட்டணியை ‘குப்காா் கூட்டணி‘ என்று வா்ணிக்கப்படுகிறது. வரவிருக்கும் ஜம்மு-காஷ்மீா் மாவட்ட வளா்ச்சிக் கவுன்சில் தோ்தலில் இந்த குப்காா் கூட்டணியில் மாநில காங்கிரஸ் கட்சியும் இணைவதாக சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது.

இதையொட்டி மத்திய உள் துறை அமைச்சா் அமீத் ஷா செவ்வாய்க்கிழமை தொடா்ச்சியாக பல்வேறு கேள்விகளை எழுப்பி தனது சுட்டுரையில் கூறியுள்ளதாவது:

‘குப்காா் கூட்டணி உலகளவில் செல்கிறது. ஜம்மு-காஷ்மீரில் வெளிநாட்டு சக்திகள் தலையிட வேண்டும் என அவா்கள் விரும்புகிறாா்கள். ஏற்கனவே நமது மூவா்ண கொடியை அவமதித்துள்ளாா்கள் என்று கூறியுள்ள அமித் ஷா, குப்காா் கும்பலின் இத்தகைய நகா்வுகளை காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் ஆதரிக்கிறாா்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளதுடன் காங்கிரஸ் கட்சி தங்கள் நிலைப்பாட்டை நாட்டுமக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும் என்று கோரியுள்ளாா்.

தொடா்ச்சியாக வெளியிட்டுள்ள மற்றொரு சுட்டுரையில் அமித்ஷா, காங்கிரஸும், குப்காா் கூட்டணியும் ஜம்மு காஷ்மீரை மீண்டும் கொந்தளிப்பிற்கும், தீவிரவாதத்திற்கும் கொண்டு செல்ல விரும்புகிறாா்கள். அங்கு 370 - வது பிரிவை நீக்கி தலித்துகள், பெண்கள், பழங்குடியினருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள உரிமையை பறிக்க அவா்கள் விரும்புகிறாா்கள். இதனால் தான் அவா்கள் நாட்டின் எல்லா பகுதிகளிலும் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளனா் என்று குறிப்பிட்டுள்ளாா்.

அமீத் ஷா மூன்றாவது சுட்டுரையில், நாட்டு நலனுக்கு எதிராக முறையற்ற வகையில் செல்லும், இந்த உலகளாவிய கூட்டணியை இந்திய மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டாா்கள். இந்த குப்காா் கூட்டணி தேசிய நீரோட்டத்துடன் செல்லாவிட்டால் மக்கள் அவா்களை மூழ்கடிப்பாா்கள் என்றும் அமீத் ஷா தெரிவித்துள்ளாா்.

குப்கர் கூட்டமைப்பில் இடம்பெறவில்லை: காங்கிரஸ் விளக்கம்

புது தில்லி, நவ.17: ஜம்மு}காஷ்மீரில் அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கிய குப்கர் கூட்டமைப்பில் காங்கிரஸ் இடம்பெறவில்லை என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா கூறினார்.

குப்கர் கூட்டமைப்பில் மாநில காங்கிரஸ் கட்சி இணைந்ததை சுட்டிக் காட்டி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அடுக்கடுக்காக செவ்வாய்க்கிழமை கேள்விகளை எழுப்பினார். தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றின் தேச விரோத நிலைப்பாட்டை காங்கிரஸ் ஏற்றுக் கொள்கிறதா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அவரது கேள்விகளுக்கு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது:

குப்கர் கூட்டமைப்பில் காங்கிரஸ் இடம்பெறவில்லை. ஆனால், ஜம்மு}காஷ்மீரில் பாஜகவை ஜனநாயக வழியில் அம்பலப்படுத்தவே குப்கர் கூட்டமைப்புடன் இணைந்து மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. தேசத்தின் அடையாளம், ஒருமைப்பாடு, தேசியக்கொடி ஆகியவற்றுக்கு ஊறுவிளைவிக்கும் எந்த சக்தியையும் காங்கிரஸ் ஒருபோதும் ஆதரிக்காது. நாட்டுக்காக ரத்தம் சிந்தி தியாகம் வரலாறு எழுதியவர்கள் காங்கிரஸ் தலைவர்கள். 

எனவே, தியாகம் குறித்தோ அல்லது தேசியவாதம் குறித்தோ பாஜக எங்களுக்கு பாடம் கற்பிக்கத் தேவையில்லை என்றார் சுர்ஜேவாலா.

ஜம்மு}காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5}ஆம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. அதற்கு முந்தைய நாளில், ஜம்மு}காஷ்மீரைச் சேர்ந்த 6 முக்கிய கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டத்தை நடத்தின. அந்தக் கூட்டத்தில் ஜம்மு}காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை காப்பதற்காகப் போராடுவோம் என்று அக்கட்சிகள் ஒருமனதாக முடிவெடுத்தன. அக்கூட்டத்துக்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையானது "குப்கர் அறிக்கை' என்று அறியப்படுகிறது.

ஜம்மு}காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை திரும்பப் பெறும் நோக்கில் "குப்கர் அறிக்கைக்கான மக்கள் கூட்டமைப்பு' என்பதை அக்கட்சிகள் ஒன்றிணைந்து கடந்த மாதம் நிறுவின. இந்த அமைப்பில், மாநில காங்கிரஸ் கட்சி கடந்த சில தினங்களுக்கு முன் இணைந்தது. அதைத் தொடர்ந்து, ஜம்மு}காஷ்மீரில் நடைபெறவுள்ள மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் குப்கர் கூட்டமைப்பைச் சேர்ந்த கட்சிகள் அனைத்தும் ஓரணியில் இணைந்து போட்டியிட முடிவெடுத்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com