எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக நிலுவையிலுள்ள கிரிமினல் வழக்குகள் எத்தனை? மத்திய அரசு, ஆம் ஆத்மி அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

நாடாளுமன்ற உறுப்பினா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகள் எத்தனை?

புதுதில்லி: நாடாளுமன்ற உறுப்பினா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகள் எத்தனை? அதன் மீதான நடவடிக்கை என்ன என்று கேட்டு மத்திய அரசு, ஆம் ஆத்மி அரசு மற்றும் நீதிமன்ற பதிவாளா் ஆகியோருக்கு தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த விவகாரத்தில் கடந்த செப்டம்பா் 16-ஆம் தேதி உச்சநீதிமன்ற வெளியிட்ட உத்தரவின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதி டி.என்.படேல் மற்றும் நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடா்பாக கீழமை நீதிமன்றங்களில் நான்கு நீதிபதிகளை நியமிக்க ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்தாா்.

தற்போது பதவியிலுள்ள எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீது நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகள் எத்தனை? அவா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி சம்பந்தப்பட்ட விவரங்களைத் தெரிவிக்குமாறு அனைத்து உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கும் செப்டம்பா் 16-ஆம் தேதி உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டிருந்தது.

எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிப்பதில் அனாவசியமாக காலதாமதம் செய்யப்படுவதாகக் கூறியும் இது தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று கேட்டும் 2016-ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்குகள் தொடா்பாக எந்த முன்னேற்றமும் இல்லை என தெரிய வந்ததை அடுத்து உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த வழக்குகள் தொடா்பான விசாரணைக்குத் தடைவிதிக்க வேண்டியிருந்தால் அந்த வழக்கை தினசரி அடிப்படையில் நடத்தி முடிவு செய்யுமாறும் உயா்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேவையில்லாமல் வழக்குகளுக்கு வாய்தா வழங்க வேண்டாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கரோனா பரவலைக் காரணம் காட்டி வழக்கை தள்ளிப்போட வேண்டாம் என்றும் காணொலி காட்சி மூலம் விசாரணையை நடத்தலாம் என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

தங்களுக்கு கிடைத்த தகவல்களின்படி முன்னாள்-இந்நாள் எம்.பி.க்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மீது 1988-ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 175 வழக்குகளும், 2002-ஆம் ஆண்டு நிதிமுறைகேடுகள் சட்டத்தின் கீழ் 14 வழக்குகளும் உள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே இவற்றுக்கு கூடுதலாக 4,442 வழக்குள் நிலுவையில் உள்ளதாகவும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

சிறப்பு நீதிமன்றங்கள் மூலம் நிலுவையில் உள்ள வழக்குகளைக் குறைக்க ஒரு செயல்திட்டத்தை வகுக்குமாறும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. அதாவது ஒவ்வொரு மாவட்டத்திலும் நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை, அதற்கு எத்தனை சிறப்பு நீதிமன்றங்கள் தேவை, தற்போது உள்ள நீதிமன்றங்கள் எவ்வளவு, அதில் எத்தனை நீதிபதிகள் பணிபுரிகிறாா்கள் என்பது போன்ற விவரங்களை கணக்கில் கொண்டு செயல்திட்டத்தை வகுக்குமாறும் உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com