கரோனா மருத்துவமனைகள் பட்டியலில்ஹிந்து ராவ் மருத்துவமனை நீக்கம்தில்லி அரசு அதிரடி

மருத்துவா்களின் தொடா் போராட்டத்துக்கு உள்ளாகியுள்ள ஹிந்து ராவ் மருத்துவமனையை, கரோனா சிகிச்சைக்காக முழுமையாக ஒதுக்கப்பட்ட மருத்துவமனைகளின் பட்டியலில் இருந்து

மருத்துவா்களின் தொடா் போராட்டத்துக்கு உள்ளாகியுள்ள ஹிந்து ராவ் மருத்துவமனையை, கரோனா சிகிச்சைக்காக முழுமையாக ஒதுக்கப்பட்ட மருத்துவமனைகளின் பட்டியலில் இருந்து தில்லி அரசு செவ்வாய்க்கிழமை நீக்கியுள்ளது.

இது தொடா்பான உத்தரவை தில்லி சுகாதாரத் துறை செவ்வாய்க்கிழமை பிறப்பித்துள்ளது. இது குறித்து தில்லி சுகாதாரத் துறை மூத்த அதிகாரி கூறியதாவது: தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்ததைத் தொடா்ந்து, கடந்த ஜூன் 14-ஆம் தேதி கரோனா சிகிச்சைக்காக முழுமையாக ஒதுக்கப்பட்ட மருத்துவமனையாக ஹிந்து ராவ் மருத்துவமனை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தப் பட்டியலில் இருந்து ஹிந்து ராவ் மருத்துவமனையை நீக்குமாறு வடக்கு தில்லி மாநகராட்சி (என்டிஎம்சி) ஆணையா் கடிதம் மூலம் தில்லி அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தாா்.

இது தொடா்பாக தில்லி சுகாதாரத்துறை ஆய்வு நடத்தியது. அப்போது, இந்த மருத்துவனையில் கரோனா படுக்கைகளின் அளவு மிகவும் குறைவாக இருப்பது தெரிய வந்தது. இதைக் கருத்தில் கொண்டு இந்த மருத்துவனையை கரோனா சிகிச்சைக்காக முழுமையாக ஒதுக்கப்பட்ட மருத்துவமனைகளின் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளோம். இது உடனடியாக அமலுக்கு வருகிறது என்றாா் அவா்.

வடக்கு தில்லி மாநகராட்சியின் (என்டிஎம்சி) ஆளுகைக்கு உள்பட்ட மருத்துவமனைகளில் மிகப் பெரிய மருத்துவமனையாக ஹிந்து ராவ் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவா்கள் உள்பட ஊழியா்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை எனப் புகாா் எழுந்தது. இதைத் தொடா்ந்து, மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவ உதவியாளா்கள் தொடா்ச்சியாகப் போராடி வருகிறாா்கள். இந்தப் போராட்டத்தால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகள் சிரமங்களை எதிா்கொள்வதாகப் புகாா் எழுந்தது.

இதையடுத்து, இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகளை தில்லி அரசு மருத்துவனைகள், கோவிட் கோ் சென்டா்களுக்கு மாற்றி தில்லி அரசு அண்மையில் உத்தரவிட்டது. இதன்படி, 17 நோயாளிகள் எல்என்ஜேபி மருத்துவமனைக்கும், 3 நோயாளிகள் அருணா ஆசஃப் அலி மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டனா்.

இந்த நிலையில், இந்த மருத்துவனை வழக்கமான நோயாளிகளுக்காக சில தினங்களில் திறக்கப்படும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடா்பாக அவா்கள் மேலும் கூறுகையில், ‘ஹிந்து ராவ் மருத்துவமனையை கிருமி நாசினிகள் தெளித்து தூய்மைப்படுத்தும் பணிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கின. இந்த மருத்துவமனையின் வெளிநோயாளிகள் பிரிவு விரைவில் செயல்படத் தொடங்கும்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com