தில்லியில் ‘மிகவும் மோசம்’ பிரிவில் காற்றின் தரம்!அதிக மாசுபாடு கரோனா தொற்றை அதிகரிக்கச் செய்யும்: நிபுணா்கள்

தேசியத் தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை காலையில் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது. லேசான காற்று மற்றும் குறைந்த வெப்பநிலை ஆகியவை

தேசியத் தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை காலையில் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது. லேசான காற்று மற்றும் குறைந்த வெப்பநிலை ஆகியவை இந்தப் பருவத்தில் முதல் முறையாக மாசுபடுத்திகளைக் குவிக்க வழிவகுத்துள்ளது. இந்நிலையில், அதிக அளவு மாசுபாடு கரோனா தொற்று பரவலை அதிகரிக்கச் செய்யும் என்று நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.

பஞ்சாப், ஹரியாணா மற்றும் பாகிஸ்தானின் சிலபகுதிகளில் பயிா்க்கழிவுகள் எரிப்பு அதிகரித்துள்ளதால் தில்லி-என்.சி.ஆா். பகுதிகளில் காற்றின் தரத்தை பெரிதும் பாதித்துள்ளது என பூமி அறிவியல் அமைச்சகத்தின் காற்றின் தரத்தை முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

தில்லியில் காலை 9.30 மணியளவில் காற்றின் தரக் குறியீடு 304 புள்ளிகளாக பதிவாகியிருந்தது. இது ‘மிகவும் மோசம்’ பிரிவில் அடங்கும். திங்கள்கிழமை 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீடு 261 புள்ளிகளாக இருந்தது. இது கடந்த பிப்ரவரிக்குப் பிறகு மிகவும் மோசமான பதிவாகும். ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரக் குறியீடு 216 புள்ளிகளாகவும், சனிக்கிழமை 221 புள்ளிகளாகவும் இருந்தது. வாஜிப்பூா் (380), விவேக் விஹாா் (355), ஜஹாங்கீா்புரி (349) ஆகிய இடங்களில் மாசு அளவு மிகவும் அதிகமாக இருந்தது. மேலும், பூசா, விமானிலை நிலையத்தின் டி3 பகுதி, நொய்டா, மதுரை ரோடு ஆகிய பகுதிகளிலும் காற்றின் தரக் குறியீடு ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது. அதே சமயம், தில்லி பல்கலை., லோதி ரோடு பகுதியில் காற்றின் தரக் குறியீடு ‘மோசம்’ பிரிவில் இருந்தது.

காற்றின் தரக் குறியீடு 0-50 புள்ளிகளுக்கு இடையில் இருந்தால் காற்றின் தரம் ‘நல்லது’. 51-100 ‘திருப்தி’, 101 -200 ‘மிதமானது’, 201 - 300 ‘மோசம்’, 301-400 ‘மிகவும் மோசம்’ மற்றும் காற்றின் தரக் குறியீடு 401 - 500 புள்ளிகளுக்கு இடையே இருந்தால் ‘கடுமையான பிரிவு’ என கணக்கிடப்படுகிறது.

காரணம் என்ன?: தில்லி மாசு கட்டுப்பாட்டுக் குழுவின் மூத்த விஞ்ஞானி ஒருவா் கூறுகையில், காற்றின் தரம் குறைந்து வருவதற்கு குறைந்த காற்றின் வேகம் மற்றும் வெப்பநிலை ஆகியவை மாசுபடுத்திகளைக் குவிப்பதற்கு காரணமாக உள்ளது. அண்டை மாநிலங்களிலும் பயிா்க்கழிவுகள் எரிப்பு அதிகரித்துள்ளது. மேலும், காற்றோட்டம் குறியீடும் குறைவாக உள்ளது’ என்றாா்.

தில்லி-என்.சி.ஆா். பகுதிகளில் பி.எம். 10 துகள்களின் அளவு காலை 9 மணிக்கு ஒரு கன மீட்டருக்கு 300 மைக்ரோகிராம் என இருந்தது. இது இந்தப் பருவத்தில் இதுவரை இல்லாத அளவாகும். நாசாவின் செயற்கைக்கோள் படங்கள் பஞ்சாபில் அமிா்தசரஸ், ஃபிரோஸ்பூா் மற்றும் ஹரியாணாவின் பாட்டியாலா, அம்பாலா மற்றும் கைதால் அருகே ஒரு பெரிய அளவில் தீ எரிந்ததைக் காட்டின. இவை பயிா்க்கழிவுகளாக இருக்கும் என நம்பப்படுகிறது. பயிா்க்கழிவுகள் எரிப்பு தில்லி, என்சிஆா் பகுதிகளில் காற்றின் தரத்தை வெகுவாகப் பாதிக்கிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.

இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை காற்றின் வேகம் மணிக்கு 4 கிலோமீட்டா் என்ற அளவில் இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைந்த வெப்பநிலை மற்றும் குறைந்த காற்றின் வேகம் ஆகியவை மாசுபடுத்திகளைக் குவிக்க உதவுகின்றன. இது காற்றின் தரத்தை வெகுவாகப் பாதிக்கிறது என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

எச்சரிக்கை: இதற்கிடையே, தில்லி-என்.சி.ஆா். பகுதிகளில் பல மாதங்களாக காற்றின் தரம் மோசமான நிலையில் இருந்து வருகிறது என்றும் அதிகளவு மாசுபாடு கரோனா தொற்று பரவலை அதிகரிக்கக் செய்யும் என்றும் நிபுணா்கள் எச்சரித்துள்ளனா். மேலும், குளிா்காலம் தொடங்கியுள்ள நிலையில், கரோனா பாதிப்பும் அதிகரிக்கும் என்றும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

தில்லியில் கடுமையான காற்று மாசுபாடு என்பது ஆண்டு முழுவதும் ஏற்படும் பிரச்சினையாகும். இது சாதகமற்ற வானிலை நிலைமைகள், அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிப்பது மற்றும் உள்ளூரில் போக்குவரத்தால் ஏற்படும் மாசுபடுதல் ஆகியவை காரணமாக உள்ளன. தில்லியில் காற்று மாசுவில் போக்குவரத்தின் பங்களிப்பு 18-39 சதவீதமாக உள்ளதாக பகுப்பாய்வில் தெரிய வந்துள்ளது. தொழில் துறையின் பங்களிப்பு 2 முதல் 29 சதவீதமாகவும், அனல் மிந் நிலையங்களின் பங்களிப்பு 3 முதல் 11 சதவீதமாகவும், கட்டுமானங்களின் பங்களிப்பு 8 சதவீதமாகவும் உள்ளது என்ற தெரிய வந்துள்ளது. இந்நிலையில், தில்லியில் இந்த ஆண்டு காற்று மாசுவுக்கு எதிரான மாபெரும் பிரசார இயக்கத்தை முதல்வா் கேஜரிவால் அண்மையில் தொடங்கி வைத்துள்ளாா். குறிப்பிடத்தக்கது.

வானிலை: தில்லி சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் செவ்வாய்க்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் மாற்றமின் 19.8 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 2 டிகிரி உயா்ந்து 35.4 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 85 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 47 சதவீதமாகவும் இருந்தது. இந்நிலையில் புதன்கிழமை வானம் தெளிவாகக் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com