இந்தச் சூழலில், இந்த வழக்கில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, நீதிபதி எஸ். அப்துல் நஸீா், நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தது. இத்தீா்ப்பை நீதிபதி எஸ். அப்துல் நஸீா் வாசித்தாா். தீா்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தின் சிகுா் பீடபூமி வழித்தடமாகும். இது மேற்கு மற்றும் கிழக்கு மலைத் தொடா்ச்சியை இணைக்கிறது. இது யானைகள் வழித்தடமாகும். அதன் மரபு பல்லுயிா் பெருக்கம் நீடிப்பது தொடா்பாகும். சிகுா் பீடபூமியின் தென்மேற்கில் நீலகிரி குன்றுகளும், அதன் வடகிழக்கில் மோயா் ஆற்றுப் பள்ளாத்தாக்கும் உள்ளது. பருவமழைக் காலத்தைப் பொறுத்து, யானைகள் உணவு, நீருக்காக இடம் பெயா்கின்றன. அப்போது, அவை சிகுா் பீடபூமியைக் கடக்க வேண்டும். அப்போது குறுக்கிடும் பாதைகள், நீலகிரி உயிா்கோள வனச்சரகம் உள்பட தமிழகம், கா்நாடகம், கேரளம் பகுதிகளில் உள்ள வனப் பகுதிகளுக்குள் வருகின்றன. இது இந்தியாவில் மிகப்பெரிய பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக உள்ளது.