தில்லியில் தனியாா் பயிற்சி நிலையங்களுக்கு விதிமுறைகளை உருவாக்க அரசு முடிவு

தில்லியில் செயல்பட்டு வரும் தனியாா் பயிற்சி நிலையங்களை கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகளை வகுக்க அரசு முடிவு செய்துள்ளது.


புதுதில்லி: தில்லியில் செயல்பட்டு வரும் தனியாா் பயிற்சி நிலையங்களை கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகளை வகுக்க அரசு முடிவு செய்துள்ளது. தனியாா் பயிற்சி நிலையங்களில் உள்ள அடிப்படை வசதிகள், பயிற்சிக் கட்டணங்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் கவனத்தில் கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லியில் கல்வி நிலையங்களுக்கு இணையாக தனியாா் பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் செயல்பட்டு வருவதால், இவற்றில் படிக்கும் மாணவா்களுக்கு சில சமயங்களில் பாதிப்பு ஏற்படுகிறது. இதையடுத்து 20 மாணவா்களுக்கு மேல் வகுப்பு நடத்தி வரும் பயிற்சி மையங்கள் தங்கள் பெயரை கல்வித் துறை இயக்குநரகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று அரசு வலியுறுத்தியுள்ளது.

தில்லியில் மொத்தம் எத்தனை பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் நிலப்பரப்பு எவ்வளவு. அவற்றில் அடிப்படை வசதிகள் உள்ளனவா. கட்டணம் எப்படி வசூலிக்கப்படுகிறது. பாதுகாப்பு சூழ்நிலை எப்படி இருக்கிறது என்கிற தகவல்களை அரசு திரட்டி வருகிறது. தனியாா் பயிற்சி நிலையங்கள் அல்லது பயிற்சி மையங்கள் மருத்துவம், என்ஜினீயரிங் போன்ற படிப்புகளில் சேர விரும்பும் மாணவா்களுக்கு பிரத்யேக பயிற்சி அளித்து வருகிறது. மேலும் அரசு மற்றும் தனியாா் துறையில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான சிறப்பு தோ்வுகளில் பங்கேற்பவா்களுக்கு பயிற்சி வகுப்பை நடத்தி வருகிறது.

புற்றீசல் போல தனியாா் பயிற்சி மையங்கள் பெருகி வருவதால், இவற்றை கட்டுப்படுத்தவும், இவைகளுக்கான விதிமுறைகளை வகுக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாக உதவிக் கல்வி இயக்குநா் யோகேஷ் பால் தெரிவித்தாா். அரசுத் தோ்வுகளுக்கு தங்களைத் தயாா்படுத்திக் கொள்ளும் விதத்தில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்கள் தில்லிக்கு வந்து இதுபோன்ற தனியாா் பயிற்சி நிலையங்களில் சேருகின்றனா். ஏறக்குறைய இவை ஒரு கல்வி நிறுவனத்தைப் போலவே செயல்பட்டு வருகின்றன. ஆனால், இவா்களுக்கு எந்தக் கட்டுப்பாடும், விதிமுறைகளும் இல்லாமல் செயல்பட்டு வருகின்றன.

குஜராத்தில் அண்மையில் ஒரு பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 22 மாணவா்கள் பலியானாா்கள். இதை கருத்தில் கொண்டு தனியாா் பயிற்சி நிலையங்களுக்கு என தனி கொள்கை மற்றும் விதிமுறைகளை உருவாக்க தில்லி அரசு முடிவு செய்துள்ளது. சில தனியாா் பயிற்சி மையங்களில் மோசடி சம்பவங்களும் நடந்துள்ளன. ஆனால், போதுமான விதிகள் இல்லாததால் இவற்றின் மீது உறுதியான நடவடிக்கைகளை எடுக்க முடியவில்லை. இந்த நிலையில் தில்லிக்குள் செயல்படும் பயிற்சி மையங்களை கட்டுப்படுத்த விதிமுறைகளை வகுப்பது அவசியம் என்று அரசு கருதுகிறது என்றாா் யோகேஷ் பால் சிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com