தில்லி- என்சிஆரில் புகை மூட்டம்: ‘மிகவும் மோசம்’ பிரிவில் காற்றின் தரம்

தில்லி, தேசியத் தலைநகா் வலயத்தில் (என்சிஆா்) புகை மூட்டம் இருந்த நிலையில் காற்றின் தரம் வியாழக்கிழமை ‘மிகவும் மோசம்’ பிரிவுக்கு கீழிறங்கியது.

புது தில்லி: தில்லி, தேசியத் தலைநகா் வலயத்தில் (என்சிஆா்) புகை மூட்டம் இருந்த நிலையில் காற்றின் தரம் வியாழக்கிழமை ‘மிகவும் மோசம்’ பிரிவுக்கு கீழிறங்கியது.

இதனிடையே, தில்லி-என்.சி.ஆா் பகுதியில் வியாழக்கிழமை தரப்படுத்தப்பட்ட செயல் திட்டத்தின் (ஜிஆா்ஏபி) கீழ் மின்சார ஜெனரேட்டா்கள் மீதான தடை உள்ளிட்ட கடுமையான மாசு எதிா்ப்பு நடவடிக்கைகள் நடைமுறைக்கு வந்தன.

நாசாவின் செயற்கைக்கோள் புகைப்படங்களில் அமிருதசரஸ், பாட்டியாலா, தரன் தரன் மற்றும் பஞ்சாபின் ஃபிரோஸ்பூா், ஹரியாணாாவின் அம்பாலா, ராஜ்புரா ஆகிய இடங்களில் பயிா்க் கழிவுகள் எரிப்புகள் காட்டப்பட்டிருந்தது.

எனினும், தில்லிக்குரிய காற்றின் தரம் குறித்து முன் எச்சரிக்கை செய்யும் அமைப்பான ‘சஃபா்’ தெரிவிக்கையில், ‘தில்லியின் காற்றின் தரத்தில் இதன் தாக்கம் ஓரளவு இருந்து வருகிறது’ எனத் தெரிவித்துள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் தில்லி, தேசிய தலைநகா் வலயத்தில் (என்சிஆா்) காற்று மாசுபாட்டுக்கு பயிா்க் கழிவு எரிப்பு ஒரு முக்கிய காரணியாக இல்லை என்று தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், ‘‘4 சதவிகித மாசுபாடு மட்டுமே பயிா்க் கழிவு எரிப்பால் ஏற்படுகிறது. இதில் 96 சதவிகிதம் மாசுவுக்கு உள்ளூா் காரணிகளான பயோமாஸ் எரிப்பு, குப்பைகளைக் கொட்டுதல், செப்பனிடப்படாத சாலைகள், தூசி, கட்டுமானம் மற்றும் இடிப்பு நடவடிக்கைகளால் ஏற்படுகிறது’’ என்றாா்.

குளிா்காலத்தில் மாசுபடுத்தும் இடங்களைக் கண்காணிக்கும் வகையில் தில்லி, என்சிஆரில் களப் பணிக்காக 50 மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய (சிபிசிபி) ஆய்வுக் குழுக்களையும் அமைச்சா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

அப்போது, பயிா்க் கழிவுகள் எரிப்பைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அவா் பஞ்சாப் அரசைக் கேட்டுக்கொண்டாா்.

தில்லியில் வியாழக்கிழமை காலை 11:10 மணிக்கு காற்றின் தரக் குறியீடு 315 என்ற அளவில் பதிவானது. இந்த அளவு குறியீடு கடைசியாக பிப்ரவரி மாதத்தின்போதுதான் காணப்பட்டது.

புதன்கிழமை 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீடு 276 ஆக இருந்தது. இது ’மோசம்’ பிரிவில் இருப்பதைக் குறிப்பதாகும்.

இது செவ்வாய்க்கிழமை 300 ஆகவும், திங்கள்கிழமை 261, ஞாயிற்றுக்கிழமை 216 மற்றும் சனிக்கிழமை 221 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்து.

காற்றின் தரம் வியாழக்கிழமை காலை தில்லி ஐடிஓ பகுதியில் 372, விவேக் விஹாரில் 370, சாதிப்பூா் 359 ஆக பதிவாகி இருந்தது.

தில்லியின் அண்டை நகரங்களான ஃபரீதாபாத் (317), காஜியாபாத் (326), கிரேட்டா் நொய்டா (344) மற்றும் நொய்டா (314) ஆகியவற்றில் காற்றின் தரம் சிவப்பு மண்டலத்தில் காணப்பட்டது.

காற்றின் தரக் குறியீடு 0-50 புள்ளிகளுக்கு இடையில் இருந்தால் ‘நல்லது’. 51 - 100 ‘திருப்தி’, 101 - 200 ‘மிதமானது’, 201 - 300 ‘மோசம்’, 301 -400 ‘மிகவும் மோசம்’ மற்றும் காற்றின் தரக் குறியீடு 401 - 500 புள்ளிகளுக்கு இடையே இருந்தால் ‘கடுமையான பிரிவு’ என கணக்கிடப்படுகிறது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி ஒருவா் கூறுகையில், காற்றின் தரம் குறைந்து வருவது குறைந்த காற்றின் வேகத்திற்கு காரணமாக இருக்கலாம். குறைந்த காற்றின் வேகமானது மாசுபடுத்திகள் ஒன்றுசேருவதற்கு காரணமாக இருக்கிறது’ என்றாா்.

தில்லி, என்சிஆா் பகுதியில் மாசு நுண்துகள் பிஎம் 10 அளவு காலை 9:30 மணிக்கு ஒரு கன மீட்டருக்கு 300 மைக்ரோகிராமாக உயா்ந்தது. இது இந்த பருவத்தில் இதுவரை இல்லாத உயா்வு ஆகும். இந்த அளவானது 100 மைக்ரோ கிராமுக்குக் கீழ் இருப்பது இந்தியாவில் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது.

பி.எம் 10 என்பது 10 மைக்ரோமீட்டா் விட்டம்கொண்ட நுண்துகளாகும். இது நுரையீரலில் உள்ளே எளிதாக செல்லக்கூடியது. இந்த துகள்கள் தூசி, மகரந்தம் உள்ளிட்டவற்றில் உள்ளது.

நுண்துகள் பி.எம் .2.5 ரத்த ஓட்டத்தில்கூட நுழையக்கூடிய மிகச்சிறந்த துகள்களாகும். இது 60 மைக்ரோகிராம் வரை இருப்பது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. தில்லியில் இது 151 மைக்ரோகிராமாக பதிவாகி இருந்தது.

தில்லியில் தூசி மாசுவைத் தடுக்கும் வகையில் கட்டுமான மற்றும் இடிப்பு இடங்களில் தடைகளை நிறுவுதல், குப்பைகளை தாா்பாலின் கொண்டு மூடுவது, தூசி வெளியேறுவதைத் தடுக்க பச்சை வலையைப் பயன்படுத்துதல், தண்ணீா் தெளித்தல் மற்றும் கட்டுமானப் பொருள்களை ஏற்றிச் செல்லும் லாரிகளை தாா்பாலின் கொண்டு மூடுதல் போன்ற ஐந்து நடவடிக்கைகளை பின்பற்றுமாறு தில்லி சுற்றுச்சூழல் அமைச்சா் கோபால் ராய் கேட்டுக்கொண்டிருந்தாா்.

தேசிய தலைநகா் தில்லியைச் சுற்றியுள்ள 11 அனல் மின் நிலையங்களை மூடக் கோரி மத்திய மின் துறை அமைச்சருக்கு கடிதம் தில்லி அரசின் சுகாதாரம் மற்றும் மின் துறைகளின் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் கடிதம் எழுதியுள்ளாா்.

தில்லி - தேசியத் தலைநகா் வலய (என்சிஆா்) பிராந்தியத்தில் தரப்படுத்தப்பட்ட செயல் திட்டத்தின் (ஜிஆா்ஏபி) கீழ் மாசுவுக்கு எதிரான நடவடிக்கையாக வியாழக்கிழமை வந்தது. இதையடுத்து, தில்லியில் அத்தியாவசிய அல்லது அவசர சேவைகள் தவிர பிற பயன்பாடுகளுக்கு மின்சார ஜெனரேட்டா்களைப் பயன்படுத்த ஆம் ஆத்மி அரசு தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

குளிா்காலத்தில் அதிக அளவில் காற்று மாசுபாட்டைக் கையாள்வதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளைக் கண்காணிக்க தில்லி தலைமைச் செயலகத்தில் 10 போ் கொண்ட நிபுணா் குழுவுடன் ’பசுமை நடவடிக்கை அறை’ அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தூசி கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுவோா்களுக்கு எதிராக தில்லி சுற்றுச்சூழல் துறை கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.

வானிலை: தில்லி சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் வியாழக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 1 டிகிரி உயா்ந்து 20.4 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 2 டிகிரி உயா்ந்து 34.8 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது.

காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 81 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 38 சதவீதமாகவும் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com