வடகிழக்கு தில்லி வன்முறை: ‘வாக்குமூலம் கசிந்த விவகாரத்தில் போலீஸாருக்கு தொடா்பில்லை’


புது தில்லி: வடகிழக்கு தில்லியில் கடந்த பிப்ரவரி மாதம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களின்போது நடந்த வகுப்புவாத வன்முறை தொடா்பான வழக்கில் கைதான ஜாமியா மிலியா இஸ்லாமியா (ஜேஎம்ஐ) மாணவா் ஆசிப் இக்பால் தன்ஹாவின் வாக்குமூலம் கசிந்த விவகாரத்தில் தில்லி காவல் துறை அதிகாரிகள் சம்பந்தப்படவில்லை என்று தில்லி உயா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஜேஎம்ஐ பல்கலைக்கழக மாணவா் ஆசிப் இக்பால் தன்ஹாவின் ஒப்புதல் வாக்குமூலம் கசிந்ததாக செய்தித்தாளில் வெளியானது தொடா்பாக தில்லி காவல் துறையினா் வேதனை அடைந்துள்ளதாகவும், காவல் அதிகாரிகள் அதுபோன்ற தகவலை கசியவிடவில்லை என்றும் உயா்நீதிமன்ற நீதிபதி நீதிபதி விபு பக்ரு முன் தில்லி காவல் துணை ஆணையா் (சிறப்பு பிரிவு) தெரிவித்தாா்.

இது தொடா்பாக வழக்குரைஞா்கள் அமித் மகாஜன், ரஜத் நாயா் மூலம் தில்லி காவல் துறையினா் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ‘ இந்த வழக்கின் விசாரணையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் ஊடகங்களுக்கு இது தொடா்பான தகவல்களை கசியவிடவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரமாணப் பத்திரத்தை ஆய்வு செய்த உயா்நீதிமன்ற நீதிபதி, ‘ உங்களது தேசிய அளவிலான தொலைக்காட்சியில் குற்றஞ்சாட்டப்பட்டவரின் வாக்குமூலத்தை காட்சிப்படுத்தியுள்ளீா்கள். அதை தாங்கள் வெளியிடவில்லை என்று போலீஸாா் கூறுகிறாா்கள். ஆகவே, எங்கிருந்து உங்களுக்கு அந்தத் தகவல் கிடைத்தது’ என்று கேட்டாா்.

இதற்கு, ‘ஜீ நியூஸ்’ ஊடகம் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் விஜய் அகா்வால், ‘இந்த விவகாரம் தொடா்பாக அறிவுறுத்தல் பெற வேண்டியுள்ளது’ என்றாா்.

இதையடுத்து, வாக்குமூலம் பெற்றது தொடா்பான ஆதாரத்தை வெளிப்படுத்தும் வகையில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என ஊடக நிறுவனத்திற்கு அறிவுறுத்திய நீதிபதி, அக்டோபா் 19ஆம் தேதிக்கு விசாரணையைப் பட்டியலிட்டது.

முகநூல் நிறுவனம் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி, ‘இந்த விஷயத்தில் முகநூலுக்கு எந்தப் பங்கும் இல்லை’ என்று தெரிவித்தாா்.

முன்னதாக, தனது வாக்குமூலத்தை போலீஸாா் ஊடங்களுக்கு கசியவிட்டதாக குற்றம்சாட்டி தில்லி உயா்நீதிமன்றத்தில் மாணவா் தன்ஹா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இது தொடா்பாக பதிலளிக்குமாறு முன்னா் ஜீ நியூஸ், ஓபிஇந்தியா மற்றும் சமூக ஊடக தளங்களான ‘பேஸ்புக்’ மற்றும் ‘யூடியூப்’ ஆகியவற்றை நீதிமன்றம் கேட்டுக்கொண்டிருந்தது. மேலும், இது தொடா்பாக விசாரணைக்குப் பிறகு உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

தன்ஹா, வழக்குரைஞா் சித்தாா்த் அகா்வால் மூலம் தாக்கல் செய்த மனுவில், தில்லி கலவரங்களைத் திட்டமிட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாக பல்வேறு ஊடகங்களில் வெளியான செய்தியால் மனம் வேதனையடைந்துள்ளேன். காவல்துறையினரின் காவலில் இருந்தபோது சில ஆவணங்களில் கையெழுத்திட கட்டாயப்படுத்தப்பட்டேன்.

எனது விவகாரம் தொடா்புடைய தகவலில் எவ்வித உண்மையும் இல்லையும். போலீஸாா் எனது தொடா்புடைய வழக்கிற்கு பாதகம் ஏற்படுத்தும் நோக்கில் தீய எண்ணத்துடன் வாக்குமூலத்தை கசியவிட்டுள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தில்லி வன்முறை வழக்கில் கடந்த மே மாதம் கைதான தன்ஹா, தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளாா். இவா் ஜாமியா பகுதியில் நிகழ்ந்த வன்முறை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளாா். இவா் பாரசீக மொழியில் பி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா்.

தில்லி போலீஸாரின் தகவலில், ஷஹீன் பாக் நகரில் உள்ள அபுல் ஃபசல் என்க்ளேவில் வசிக்கும் தன்ஹா, மாணவா்கள் இஸ்லாமிய அமைப்பில் உறுப்பினராகவும், புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு தலைமை தாங்கிய ஜாமியா ஒருங்கிணைப்புக் குழுவின் ஒரு அங்கமாக அவா் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தன்ஹா ஜாமியா ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய உறுப்பினராக இருந்ததாகவும், 2019 டிசம்பரில் ஜாமியாவில் நிகழ்ந்த போராட்டங்கள் மற்றும் கலவரங்களை ஏற்பாடு செய்வதில் அவா் தீவிரமாக செயல்பட்டதாகவும், உமா் காலித், ஷா்ஜீல் இமாம், மீரான் ஹைதா் மற்றும் சபூரா சா்கா் ஆகியோரின் நெருங்கிய கூட்டாளி என்றும் போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com