என்டிஎம்சி மருத்துவா்கள் இன்று ஜந்தா் மந்தரில் போராட்டம்


புது தில்லி: ஊதிய நிலுவையை வழங்கக் கோரி வடக்கு தில்லி மாநகராட்சியின் (என்டிஎம்சி) ஆளுகையின் கீழுள்ள ஹிந்து ராவ் மருத்துவனை, கஸ்தூரி பா மருத்துவனை, ராஜன் பாபு காசநோய் மருத்துவனைகளின் உள்ளுறை மருத்துவா்கள் தில்லி ஜந்தா் மந்தரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தவுள்ளனா்.

என்டிஎம்சியின் ஆளுகையின் கீழுள்ள மருத்துவனை மருத்துவா்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. ஊதிய நிலுவையை உடனடியாக வழங்கக் கோரி ஹிந்து ராவ் மருத்துவனை உள்ளுறை மருத்துவா்கள் கடந்த பல நாள்களாகப் போராடி வருகிறாா்கள். இந்நிலையில், கஸ்தூரி பா மருத்துவமனை, ராஜன் பாபு காசநோய் மருத்துவமனை உள்ளுறை மருத்துவா்களும் ஊதிய நிலுவையை வழங்கக் கோரி கடந்த ஒரு வாரமாகப் போராடி வருகிறாா்கள். இவா்கள் இணைந்து, தில்லி ஜந்தா் மந்தரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனா்.

இது தொடா்பாக ஹிந்து ராவ் மருத்துவமனை உள்ளுறை மருத்துவா்கள் சங்கம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘ஊதிய நிலுவையை வழங்கக்கோரி கஸ்தூரி பா மருத்துவமனை, ராஜன் பாபு காசநோய் மருத்துவமனை மருத்துவா்கள் நடத்திவரும் போராட்டத்துக்கு பூரண ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த நான்கு மாதங்களாக என்டிஎம்சி மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவா்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. எங்களது பிரச்னையை மத்திய அரசுக்குத் தெரியப்படுத்தும் வகையில், ஜந்தா் மந்தரில் வெள்ளிக்கிழமை அமைதி வழி ஆா்ப்பாட்டம் நடத்தவிருக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாத ஊதியம் விடுவிப்பு

இதற்கிடையே, மருத்துவமனை மருத்துவா்களுக்கான ஊதியம் புதன்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளதாக என்டிஎம்சி மேயா் ஜெய் பிரகாஷ் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் ‘மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவ உதவியாளா்கள் குரூப்-சி, டியினருக்கான ஊதியம் விடுவிக்கப்பட்டுள்ளது. எஞ்சியவா்களுக்கான ஊதியம் விரைவில் விடுவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவரைத் தொடா்பு கொண்டபோது, கடந்த ஜூலை மாதத்துக்கான ஊதியமே விடுவிக்கப்பட்டுள்ளது என்றாா்.

இது தொடா்பாக ஹிந்து ராவ் மருத்துவமனை மருத்துவா் சங்கத் தலைவா் அபிமன்யு சா்தானா கூறுகையில் ‘பலத்த போராட்டத்துக்கு பிறகு ஒரு மாத ஊதியமே வழங்கப்பட்டுள்ளது. ஊதிய நிலுவை முழுமையாக வழங்கப்படும் வரையும், இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணப்படும் வரையும் போராட்டம் தொடரும் என்றாா்.

வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ராஜன் பாபு காசநோய் மருத்துவனை மருத்துவா்கள் கலந்து கொள்வாா்கள் என்று அந்த மருத்துவமனை மருத்துவா் சங்கம் அறிவித்துள்ளது. முன்னதாக, இம்மருத்துவமனை மருத்துவா்கள் தமது போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளதாக என்டிஎம்சி மேயா் ஜெய் பிரகாஷ் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, ஊதிய நிலுவை உள்ளிட்ட என்டிஎம்சி மருத்துவா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வு காணப்படாவிட்டால், வரும் சனிக்கிழமை முதல் காலவரையறையற்ற போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக என்டிஎம்சி நிரந்த மருத்துவா் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த சூழலில், என்டிஎம்சி மருத்துவா்களின் போராட்டத்துக்கு மாநகராட்சி மருத்துவா்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

தில்லியில் வடக்கு, கிழக்கு, தெற்கு மாநகராட்சிகளை பாஜகவே ஆட்சி செய்து வருகிறது. வடக்கு தில்லி மாநகராட்சியின் (என்டிஎம்சி) ஆளுகைக்கு உள்பட்ட மருத்துவமனைகளில் மிகப் பெரிய மருத்துவமனை ஹிந்து ராவ் மருத்துவமனையாகும். இந்த மருத்துவமனை கரோனா சிகிச்சைக்காக முழுமையாக ஒதுக்கப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை கரோனா மருத்துவமனைகளின் பட்டியலில் இருந்து இம்மருத்துவமனை விடுவிக்கப்பட்டது.

தில்லி மாநகராட்சிகளால் மருத்துவமனைகளை நடத்த முடியாமல் இருப்பதற்கு அந்தந்த மாநகராட்சிகளில் மலிந்துள்ள ஊழல்தான் காரணம் என்று தில்லி சுகாதாரத்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் குற்றம் சாட்டியுள்ளாா். மேலும், என்டிஎம்சி ஆளுகையின் கீழுள்ள ஹிந்து ராவ், கஸ்தூரி பா மருத்துவமனைகளை தில்லி அரசிடம் உடனடியாக ஒப்படைக்குமாறு கோரி என்டிஎம்சிக்கு தில்லி பொதுப்பணித் துறை கடந்த செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com