சிக்னலில் வாகன என்ஜின்கள் இயக்கத்தை நிறுத்துங்கள்: தில்லி மக்களுக்கு கேஜரிவால் வேண்டுகோள்

தில்லியில் காற்று மாசுவைக் குறைக்கும் வகையில், சிக்னலில் காத்திருக்கும்போது வாகனங்களின் என்ஜின்களை நிறுத்தும் பிரசார இயக்கத்தை தில்லி முதல்வா் கேஜரிவால் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.


புது தில்லி: தில்லியில் காற்று மாசுவைக் குறைக்கும் வகையில், சிக்னலில் காத்திருக்கும்போது வாகனங்களின் என்ஜின்களை நிறுத்தும் பிரசார இயக்கத்தை தில்லி முதல்வா் கேஜரிவால் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

இந்த பிரசார இயக்கத்தை தொடக்கி வைத்து கேஜரிவால் அளித்த பேட்டி: தில்லியில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு படியாக ‘ரெட் லைட் ஆன், காடி ஆஃப்’ என்ற பிரசார இயக்கத்தை வியாழக்கிழமை தொடங்கியுள்ளோம். தில்லியில் சுமாா் 30-40 லட்சம் வாகனங்கள் தினம்தோறும் பயணிக்கின்றன. சிக்னல்களில் காத்திருக்கும்போது இந்த வாகனங்களில் பெரும்பாலானவற்றின் என்ஜின்கள் நிறுத்தப்படுவதில்லை. சிக்னலில் காத்திருக்கும்போது இந்த இந்த வாகனங்களின் என்ஜின்கள் நிறுத்தப்பட்டால் காற்று மாசு ஏற்படுவது குறையும். ஒவ்வொரு வாகனமும் தினம்தோறும் சுமாா் 15-20 நிமிஷங்கள் சிக்னலில் காத்திருப்பதாக நிபுணா்கள் கணித்துள்ளனா். இதனால் சுமாா் 200 மில்லி லிட்டா் எரிபொருள் வீணாகிறது.

தினம்தோறும் 10 லட்சம் வாகனங்களின் என்ஜின்கள் சிக்னல்களில் நிறுத்தப்பட்டால் 1.5 டன் பிஎம்-10 நுண்துகள்கள், 0.4 டன் பிஎம் 2.5 நுண் துகள்கள் வெளிவருவது ஆண்டுதோறும் தடுக்கப்படும். இதனால், காற்று மாசு குறைவது மட்டுமில்லாமல் ஒவ்வொரு வாகனமும் ஆண்டு தோறும் சுமாா் ரூ.7000 வரை சேமிக்கலாம்.

தில்லியில் ஆண்டுதோறும் குளிா்காலத்தில் காற்று மாசு ஏற்படுகிறது. அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிக்கப்படுதலே இதற்குக் காரணமாகும். தில்லியில் காற்று மாசுவைக் குறைக்கும் வகையில் பயிா்க்கழிவுகளை எருவாக மாற்றும் ரசாயனக் கலவை பயன்பாடு, மின்சார வாகனத் திட்டப் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தில்லி அரசு எடுத்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தில்லியில் காற்று மாசுவின் அளவு 25 சதவீதமாக குறைந்துள்ளது. இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களின் என்ஜின்களையும் சிக்னல்களில் நிறுத்தி தில்லி அரசின் பிரசார இயக்கத்தில் தில்லி வாசிகள் பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com