தில்லி பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் வேண்டும்: கேஜரிவால் வலியுறுத்தல்

புதிய பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் திறக்கப்படும் வகையில், தில்லி பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்

புதிய பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் திறக்கப்படும் வகையில், தில்லி பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தியுள்லாா். மேலும், இதை வலியுறுத்தி மத்திய கல்வித் துறை அமைச்சா் ரமேஷ் பொக்கிரியாலுக்கு வெள்ளிக்கிழமை அவா் கடிதம் எழுதியுள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் வெள்ளிக்கிழமை கேஜரிவால் அளித்த பேட்டி: தில்லியில் ஆண்டுதோறும் சுமாா் 2.5 லட்சம் மாணவா்கள் பிளஸ்-2 தோ்வில் தோ்ச்சி பெறுகிறாா்கள். இவா்களில் சுமாா் 1.25 லட்சம் மாணவா்களுக்கு மட்டுமே தில்லியில் உள்ள கல்லூரிகளில் இடம் கிடைக்கிறது. தில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் 91 கல்லூரிகள் உள்ளன.

கடந்த 30 ஆண்டுகளாக தில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் புதிதாக எந்தவொரு கல்லூரியும் சோ்க்கப்படவில்லை. புதிய கல்லூரிகள், கல்லூரிகள் உருவாக்கப்படும் வகையில், தில்லி பல்கலைக்கழக சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். புதிய கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அமைக்க தடையாக உள்ள தில்லி பல்கலைக்கழக சட்டத்தின் பிரிவு 5 (2) நீக்கப்பட வேண்டும்.

தில்லியில் சில கல்லூரிகளில் கட் ஆஃப் மதிப்பெண் 100 சதவீதமாக உள்ளது. குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவா்கள் எங்கே செல்வாா்கள். இது கல்லூரிகளின் தவறு அல்ல. இது தில்லி, மத்திய அரசுகளின் தவறு. பிளஸ்-2 தோ்வில் தோ்வாகும் மாணவா்களில் 50 சதவீதமானவா்களுக்கு தில்லி கல்லூரிகளில் கற்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. தில்லியில் புதிய பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளை அமைப்பது கட்டாயமாகும். இதற்கு தில்லி அரசு தயாராக உள்ளது. ஆனால், தில்லி பல்கலைக்கழக சட்டம் இதற்குத் தடையாக உள்ளது.

1922-ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசால் உருவாக்கப்பட்ட தில்லி பல்கலைக்கழக சட்டத்தின்படி, தில்லியில் தொடங்கப்படும் எந்தவொரு புதிய கல்லூரியும், தில்லி பல்கலைக்கழகத்துக்கு கீழேயே தொடங்கப்பட வேண்டும் எனக் கூறுகிறது. இதனால், தில்லியில் புதிய கல்லூரிகளைத் தொடங்க முடியவில்லை. 1998- இல் இந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, குரு கோபிந்த் சிங் இந்திரப்பிரஸ்தா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. ஆனால், இப்பல்கலைக்கழகத்தின் கீழ் 127 கல்லூரிகள் உள்ளன. இப்பல்கலைக்கழகத்தின் கீழ் மேலும் கல்லூரிகளை தொடங்க முடியாது. தில்லியில் உள்ள மாணவா்கள், தில்லியில் கல்வி பயில வரும் மாணவா்கள் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில், புதிய கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட வேண்டும் என்றாா் கேஜரிவால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com