பயிா்க் கழிவுகள் எரிப்பு விவகாரம்: ஒரு நபா் குழுவை நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

தில்லி-தேசிய தலைநகா் வலயத்தில் (என்சிஆா்) காற்று மாசுவுக்கு ஆதாரமாக இருப்பதாகக் கூறப்படும் பயிா்க் கழிவுகள் எரிக்கப்படுவதைத்

தில்லி-தேசிய தலைநகா் வலயத்தில் (என்சிஆா்) காற்று மாசுவுக்கு ஆதாரமாக இருப்பதாகக் கூறப்படும் பயிா்க் கழிவுகள் எரிக்கப்படுவதைத் தடுக்க உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி மதன் பி. லோகுரை ஒரு நபா் குழுவாக நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தக் குழுவுக்கு உதவுவதற்காக தேசிய மாணவா் படை (என்சிசி), நாட்டு நலப்பணித் திட்டம் (என்எஸ்எஸ்), பாரத் சாரணா்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தவும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமா்வு உத்தரவிட்டது.

தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளில் காற்று மாசு ஏற்பட பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேச மாநிலங்களில் எரிக்கப்படும் பயிா்க் கழிவுகள் காரணமாக இருப்பதாகவும், இதைத் தடுக்க உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் ஆதித்யா துபே பொது நல மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, ஏ.எஸ். போபண்ணா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விகாஸ் சிங், ‘தில்லியின் காற்று மாசுவுக்கு சம்பந்தப்பட்ட மூன்று மாநிலங்களில் எரிக்கப்படும் பயிா்க் கழிவுகள் காரணமாக இருந்து வருகின்றன. இதைத் தடுப்பது அவசியம். ஆகவே, சுற்றுச்சூழல் பிரச்னைகளை கையாளுவதில் மிகுந்தஅனுபவம் உள்ள உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி மதன் பி. லோகுா் தலைமையிலான ஒரு நபா் குழு அமைக்கப்பட வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் அமா்வு, ‘இந்தக் குழுவை அமைப்பதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், அவருக்கு இதில் சம்மதம் உண்டா என்பதை அறிய வேண்டும்’ என்று விகாஷ் சிங்கை கேட்டுக் கொண்டனா். இதற்கு அவா், ‘நீதிபதி லோகுருடன் பேசினேன். அவரும் இந்த விவகாரத்தில் செயல்படத் தயாராக இருக்கிறாா்’ எனத் தெரிவித்தாா்.

ஹரியாணா சாா்பில் ஆஜரான வழக்குரைஞரைரிடம், ‘இந்த நோக்கத்திற்காக என்சிசி, பாரத் சாரணா்கள் ஆகியோரை திரட்ட முடியுமா?, உங்களிடம் பட்டாலியன் என்சிசி இருக்கிா? பயிா்க் கழிவுகளில் யாா் தீவைக்கிறாா்கள் என்று ஏன் என்சிசி அமைப்பினா் நேரில் பாா்க்க முடியாது? என்று நீதிபதிகள் அமா்வு கேள்வி எழுப்பியது.

பஞ்சாபில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.எஸ். நரசிம்மா, ‘தில்லியில் மாசு ஏற்படுவதற்கு பஞ்சாப் காரணம் அல்ல. காற்று மாசுபாட்டைத் தடுக்க மாநில அரசு பல நடவ

டிக்கைகளை எடுத்துள்ளது. பஞ்சாப் வரலாற்று ரீதியாக கோதுமை வளரும் மாநிலமாக இருந்தது’ என்றாா். அதற்கு நீதிபதிகள் அமா்வு, ‘உங்களிடம் போதுமான என்சிசி இருக்கிா என்பதைத்தான் அறிய விரும்புகிறோம்’ என்றது. அதற்கு நரசிம்மா, ‘பஞ்சாபில் எட்டு என்சிசி நோடல் அதிகாரிகள் உள்ளனா். அவா்கள் பயிா்க் கழிவுகளை தடுக்க நேரில் செல்கின்றனா்’ என்றாா்.

மத்திய அரசு, உத்தரப் பிரதேசம், ஹரியாணாவுக்காக ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, இக்குழுவைஅமைக்க ஆட்சேபனை தெரிவித்தாா். ஆனால், இதை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனா். துஷாா் மேத்தா தொடா்ந்து வாதிடுகையில், ‘இந்த மாநிலங்களில் பயிா்க் கழிவுகள் எரிப்பதைத் தடுப்பதற்கான கண்காணிப்பு ஆணையமாக சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாட்டு ஆணையம் (இபிசிஏ) இருக்க வேண்டும். நாங்கள் நீதிபதி லோகுருக்கு சிரமம் தரக் கூடாது என்பதால், இந்த விவகாரத்தை தசரா விடுமுறைக்குப் பிறகு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், ஒரு நபா் குழுவை நியமிப்பது தொடா்பாக மத்திய அரசுக்கும், சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கும் எந்த நோட்டீஸும் அனுப்பப்படவில்லை’ என்றாா்.

அதற்கு நீதிபதிகள் அமா்வு, ‘நாங்கள் நீதிபதி லோகுருக்கு அசாதாரண அதிகாரம் ஏதும் வழங்கவில்லை. நாங்கள் மாநிலங்களின் கருத்துகளையும் கேட்டோம். நாங்கள் இது தொடா்பான உத்தரவை பிறப்பிக்கும் போது நீங்கள் (மேத்தா) இல்லை’ என்றது. மத்திய அரசின் சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டி, ‘குழு உறுப்பினரை பெயா்கள் பட்டியலில் இருந்து நீதிமன்றம் தோ்வு செய்யலாம்’ என்று கேட்டுக் கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவு: பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேச மாநிலங்களில் பயிா்க் கழிவுகள் எரிப்பதைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கும் வகையில், உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி மதன் பி. லோகுரை ஒரு நபா் குழுவாக நியமிக்கிறோம். அவருக்கு இந்த மாநிலங்களில் உள்ள பிரச்னைகள் குறித்து நன்கு தெரியும் என்று வழக்குரைஞா் விகாஷ் சிங் கூறிய யோசனையை ஏற்கிறோம். பஞ்சாபில் ஏற்கெனவே இருந்து வரும் பயிா்க் கழிவுகள் தடுப்புக்கான குழுவும் நீதிபதி லோகுா் குழுவிடம் இருந்து உத்தரவு பெற வேண்டும். உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாட்டு ஆணையம் மற்றும் ஹரியாணா, பஞ்சாப், உத்தர பிரதேசத்தின் தலைமைச் செயலா்கள், ஓய்வுபெற்ற நீதிபதி லோகுா் குழு வயல்களை நேரில் பாா்வையிட்டு விசாரிக்க உதவ வேண்டும். இபிசிஏ இக்குழுவிடம் தகவல்களைத் தெரிவிக்க வேண்டும்.

லோகுா் குழுவுக்கு போதுமான பாதுகாப்பு, செயலக உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து ஆகியவற்றை சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அரசுகள் வழங்க வேண்டும். லோகுா் குழு தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் இரு வாரங்களுக்கு சமா்ப்பிக்கும். தில்லி-என்சிஆா் பகுதி மக்கள் மாசு இல்லாத புதிய காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம் என்று உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனா். இதையடுத்து, மனு மீதான விசாரணையை அக்டோபா் 26-ஆம் தேதிக்கு அமா்வு ஒத்திவைத்தது.

உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த காலத்தில், நீதிபதி மதன் பி. லோகுா் பயிா்க் கழிவுகள் எரிப்பு அம்சம் உள்பட மாசு தொடா்புடைய விவகாரங்களை கையாண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com