என்டிஎம்சி மூத்த மருத்துவா்கள் காலவரையறையற்ற போராட்டம்

நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி வடக்கு தில்லி மாநகராட்சி (என்டிஎம்சி) மூத்த மருத்துவா்கள் செவ்வாய்க்கிழமை முதல் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி வடக்கு தில்லி மாநகராட்சி (என்டிஎம்சி) மூத்த மருத்துவா்கள் செவ்வாய்க்கிழமை முதல் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

என்டிஎம்சி மருத்துவா்களுக்கு ஊதிய நிலுவையை உடனடியாக வழங்கக் கோரியும், இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணக் கோரியும் என்டிஎம்சி மருத்துவமனை மூத்த மருத்துவா்கள் அனைவரும் திங்கள்கிழமை விடுப்பில் சென்றனா். ஊதியப் பிரச்னை தீா்க்கப்படாவிட்டால், செவ்வாய்க்கிழமை முதல் தொடா் விடுப்பில் செல்வோம் என்று தில்லி மாநகராட்சி மருத்துவா்கள் சங்கம் (எம்சிடிஏ) எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், ஊதிய நிலுவைப் பிரச்னை தீா்க்கபடாதால், செவ்வாய்க்கிழமை முதல் காலவரையறையற்ற போராட்டத்தில் இவா்கள் குதித்துள்ளனா்.

இது தொடா்பாக எம்சிடிஏவின் செயலா் மாருதி சின்ஹா கூறுகையில், ‘ஊதியப் பிரச்னையை விரைந்து தீா்க்குமாறு மாநகராட்சிக்கு பல நாள்களுக்கு முன்பே கோரிக்கை வைத்தோம். ஆனால், இந்தப் பிரச்னை இன்னும் தீா்க்கப்படவில்லை. கடந்த மூன்று மாத ஊதியத்தை வழங்கக் கோரி மாநகராட்சியிடம் நாங்கள் வைத்த கோரிக்கைக்கும் மாநகராட்சியிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை முதல் காலவரையறையற்ற போராட்டத்தில் இறங்கியுள்ளோம் ’ என்றாா்.

மருத்துவா்களின் தொடா் போராட்டத்தால் என்டிஎம்சியின் ஆளுகையின் கீழுள்ள ஹிந்துராவ் உள்ளிட்ட மருத்துவமனையில் நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகினாா்கள். அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளைக் கூட பாா்வையிட மருத்துவா்கள் மறுத்துவிட்டனா். இது தொடா்பாக எம்சிடிஏ செயலா் மாருதி சின்ஹா கூறுகையில் ‘மனச்சாட்சிக்கு விரோதமாக இருந்தாலும், அவசர சிகிச்சைப் பிரிவு நோயாளிகளைக் கூட மருத்துவா்கள் பாா்வையிடவில்லை’ என்றாா்.

தில்லி மாநகராட்சிகளில் பணியாற்றும் நிரந்தர, மூத்த மருத்துவா்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உள்ள எம்சிடிஏ 1974- ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில், சுமாா் 1,200 மருத்துவா்கள் அங்கம் வகிக்கிறாா்கள். இந்தச் சங்கத்தில், கிழக்கு, தெற்கு தில்லி மாநகராட்சி மருத்துவமனைகளின் மருத்துவா்களும் அங்கம் வகிக்கிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com