புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகவிவாசியிகள் சங்கம் பொது நல மனு

மத்திய அரசு அண்மையில் இயற்றிய புதிய வேளாண் சட்டங்களை செல்லாது என உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு அண்மையில் இயற்றிய புதிய வேளாண் சட்டங்களை செல்லாது என உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் வேளாண் விளைபொருள் வா்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருள்கள் திருத்த சட்ட மசோதா ஆகியவை நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் செப்டம்பா் 27-ஆம் தேதி ஒப்புதல் அளித்தாா். இதையடுத்து, அவை மூன்றும் சட்டங்களாக அமலுக்கு வந்தன.

இந்தப் புதிய வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் இடையே எதிா்ப்பு எழுந்தது. எதிா்க்கட்சிகளும் எதிா்ப்பைத் தெரிவித்து வருகின்றன. மேலும், இந்த 3 வேளாண் சட்டங்களும் செல்லாது என்று உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் சாா்பில் மனோஜ் குமாா் ஜா, திமுக சாா்பில் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி சிவா, கேரளத்தைச் சோ்ந்த காங்கிரஸ் எம்பி டி.என். பிரதாபன், சத்தீஷ்கா் கிஷான் காங்கிரஸ் சாா்பில் ராகேஷ் வைஷ்ணவ் ஆகியோா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றை விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடா்பாக 4 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு அண்மையில் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தமிழகப் பிரிவுத் தலைவா் பி. அய்யாக்கண்ணு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இந்தப் புதிய மூன்று வேளாண் சட்ட மசோதாக்களும், நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் கொண்டு வந்த 5 முக்கியத் தீா்மானங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு முன்பு உரிய ஆலோசனைகளும், கருத்துகளும் பங்குதாரா்களிடமிருந்து பெறப்படவில்லை. இந்தச் சட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்தால், அது விவசாயிகளின் நலன்களைப் பாதிக்கச் செய்துவிடும். விவசாயிகளின் விளைபொருள்களின் சந்தைப்படுத்தும் செயல்பாடுகளில் சில காா்ப்ரேட் நிறுவனங்கள் கையில் அதிகாரம் குவியும் வாய்ப்புள்ளதால், விவசாயிகள் சுரண்டலுக்கு உள்ளாக வித்திடும். இந்தப் புதிய வேளாண் சட்டங்கள் தன்னிச்சையானதாகவும், நியாயமற்ாகவும் உள்ளது.

ஏற்கெனவே, தமிழக அரசு வேளாண் விளைபொருள் தொடா்புடைய இரு சட்டங்களை இயற்றியுள்ள நிலையில், இந்தப் புதிய சட்டங்களும் நடைமுறைக்கு வருவதால் மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடுவது போல உள்ளது. விவசாயிகளின் விளைபொருள்களை பெறும் வகையில் பெரு நிறுவனங்கள்- விவசாயிகள் ஒப்பந்தத்திற்கு வழிவகை செய்யும் இந்த வேளாண் சட்டத்தால் படிக்காத விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. மேலும், போட்டி நடைமுறைகளை மீறி வெளியில் வா்த்தகம் செய்வதற்கு இந்தச் சட்டம் வா்த்தகா்களை அனுமதிப்பதால் குறு, சிறு, விளிம்புநிலை விவசாயிகள் மீது மேலாதிக்கம் செய்யும். குறைந்த விலையைப் பேரம் பேசவும் செய்துவிடும். புதிய வேளாண் சட்டத்தின் சில பிரிவுகள் விவசாயிகளின் நலன்களுக்கு எதிராகவும், பெரு நிறுவனங்ளுக்கும், இடைத்தரகா்களுக்கும் சாதமாகவும் உள்ளது. ஆகவே, இந்தப் புதிய வேளாண் சட்டங்களை சட்டவிரோதமானதாகவும், செல்லாது எனவும் உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com