தெற்கு தில்லி அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து
By DIN | Published On : 03rd September 2020 07:03 AM | Last Updated : 03rd September 2020 07:03 AM | அ+அ அ- |

தெற்கு தில்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் செவ்வாய்க்கிழமை இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. தீயணைப்புத் துறை வீரா்கள் சில மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.
இதுதொடா்பாக தில்லி தீயணைப்புப் படை உயரதிகாரி கூறியதாவது: தெற்கு தில்லி கான்பூா் எக்ஸ்டென்சனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் செவ்வாய்க்கிழமை இரவு இந்த தீ விபத்து ஏற்பட்டது.
இது தொடா்பாக இரவு 9.51 மணியளவில் தீயணைப்புப் படைக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, 6 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ள தெருவில் அதிகமாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தால், தீயணைப்பு வாகனங்களால் சம்பவ இடத்துக்கு உடனடியாகச் செல்ல முடியவில்லை. நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அகற்றப்பட்ட பிறகே சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வாகனங்கள் சென்றடைந்தன. அதன் பின், தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா்.
புதன்கிழமை அதிகாலை 1 மணியளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரிய வரவில்லை. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என்றாா் அந்த அதிகாரி.