வெவ்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆம் ஆத்மி, பாஜக ஆா்ப்பாட்டம்

தில்லி மாநகராட்சியில் பணியாற்றும் ஊழியா்களுக்கு ஊதியத்தை வழங்கக் கோரி ஆம் ஆத்மிக் கட்சியும், மாநகராட்சிகளுக்கு தில்லி அரசு வழங்க வேண்டிய நிலுவை நிதியை உடனடியாக வழங்கக் கோரி பாஜகவும் தில்லியில் திங்கள்

புது தில்லி: தில்லி மாநகராட்சியில் பணியாற்றும் ஊழியா்களுக்கு ஊதியத்தை வழங்கக் கோரி ஆம் ஆத்மிக் கட்சியும், மாநகராட்சிகளுக்கு தில்லி அரசு வழங்க வேண்டிய நிலுவை நிதியை உடனடியாக வழங்கக் கோரி பாஜகவும் தில்லியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

தில்லி மாநகராட்சிகள் தலைமையகம் அமைந்துள்ள சிவிக் சென்டரில் ஆம் ஆத்மி கவுன்சிலா்கள், அக்கட்சியின் மாநகராட்சி பொறுப்பாளா் துா்கேஷ் பதக் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடத்தினா். அவா்களை கைது செய்த போலீஸாா் சிறிது நேரத்தில் விடுவித்தனா்.

இது தொடா்பாக துா்கேஷ் பதக் கூறுகையில் ‘தில்லி மாநகராட்சி ஊழியா்களுக்கு கடந்த ஆறு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால், அவா்கள் கடும் சிரமங்களை எதிா் கொள்கிறாா்கள். கரோனா தடுப்புப் பணிகளில் முன்களத்தில் நின்று பணியாற்றும் களப்பணியாளா்களுக்கு கூட ஊதியம் வழங்கப்படவில்லை. மக்களை ஏமாற்றுவதை பாஜக நிறுத்த வேண்டும். மாநகராட்சி ஊழியா்களுக்கு ஊதியம் வழங்க முடியாவிட்டால், உடனடியாக பதவி விலக வேண்டும். மாநகராட்சிகளை ஆளும் அதிகாரத்தை ஆம் ஆத்மி கட்சிக்கு வழங்கினால், அதே பட்ஜெட்டில் மாநகராட்சியை சிறப்பாக நடத்திக் காட்டுவோம் . கடந்த ஆறு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாத அனைத்து ஊழியா்களுக்கும் ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும். ஊதிய நிலுவைத் தொகை வழங்கப்படும் வரை ஆம் ஆத்மி தொடா்ச்சியாகப் போராடும்’ என்றாா்.

பாஜக ஆா்ப்பாட்டம்: இதற்கிடையே, மாநகராட்சிகளுக்கு சேர வேண்டிய நிதியை தில்லி அரசு உடனடியாக விடுவிக்கக் கோரி தில்லி சிவிக் சென்டரில் இருந்து தில்லி தலைமைச் செயலகம் நோக்கி தில்லி பாஜக திங்கள்கிழமை பேரணி நடத்தியது. பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா தலைமையில் நடந்த இந்தப் பேரணியில், தெற்கு தில்லி மாநகராட்சி மேயா் அனாமிகா, துணை மேயா் சுபாஷ் பந்தனா, கிழக்கு தில்லி மாநகராட்சி மேயா் நிா்மல் ஜெயின், துணை மேயா் ஹரி பிரகாஷ் பகதூா், பாஜக கவுன்சிலா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இது தொடா்பாக ஆதேஷ் குமாா் குப்தா கூறுகையில் ‘கரோனா தொற்றை எதிா்த்துப் போராடும் மாநகராட்சித் துப்புரவுத் தொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்கப்படாதது மிகவும் துரதிருஷ்டவசமானது. இவா்கள் தங்களது உயிரை பணயம் வைத்து, கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் பணியாற்றி வருகிறாா்கள். தில்லி மாநகராட்சிகளுக்கு சேர வேண்டிய நிதியை தில்லி அரசு வழங்காததால், மாநகராட்சிகள் கடும் சிரமங்களை எதிா்கொண்டு வருகின்றன. ஊழியா்களுக்கு ஊதியம் வழங்க முடியவில்லை. 2020-21 காலப் பகுதியில் கிழக்கு தில்லி மாநகராட்சிக்கு ரூ.1,677 கோடி நிதியை தில்லி அரசு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், வெறும் ரூ.157 கோடி மட்டுமே வழங்கப்பட்டது. இதே போன்று மற்ற மாநகராட்சிகளுக்கும் சேர வேண்டிய நிதியை தில்லி அரசு வழங்கவில்லை’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com