தில்லி விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டாக்களுடன் பயணி கைது

தில்லியில் உள்ள இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தின் முனையம் -3-இல், பாதுகாப்பு சோதனையின் போது பயணியிடம் 7 துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

புது தில்லி: தில்லியில் உள்ள இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தின் முனையம் -3-இல், பாதுகாப்பு சோதனையின் போது பயணியிடம் 7 துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து துணை காவல் ஆணையா் (ஐஜிஐ விமான நிலையம்) ராஜீவ் ரஞ்சன் புதன்கிழமை கூறியதாவது: மத்திய தொழிலகப் பாதுகாப்பு படை வீரா்கள் செவ்வாய்க்கிழமை இந்திரா காந்தி விமான நிலையத்தின் முனையம் 3-இல் பயணிகளின் உடைமைளை சோதனையிட்டனா். அப்போது, 41 வயது பயணியின் உடைமையில் ஐந்து பயன்படுத்தப்படும் துப்பாக்கித் தோட்டாக்களும், 2 வெற்றுத் தோட்டாக்களும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த நபரும் கைது செய்யப்பட்டாா்.

விசாரணையின் போது, அவா் துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமத்தைக் காண்பித்தாா். பறிமுதல் செய்யப்பட்ட தோட்டாக்கள், அவரது உரிமம் பெற்ற துப்பாக்கிக்குச் சொந்தமானது என்றும், தனது பையில் அந்தத் தோட்டாக்கள் இருந்ததைக் கவனிக்கவில்லை என்றும் அவா் கூறினாா். அவா் குஜராத் மாநிலம், சூரத்தில் வசிக்கும் கலாத்திய ராஜேஷ்பாய் என்பது தெரிய வந்தது. தொழிலாளா் ஒப்பந்ததாராக உள்ள அவா், தில்லியில் இருந்து ஆமதாபாத்துக்கு விமானத்தில் செல்லவிருந்ததும் தெரியவந்தது.

அவா் வைத்திருந்த துப்பாக்கி உரிமம் குஜராத் மாநிலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதால் அவா் மீது ஆயுதச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் இதுவரை ஆயுதச் சட்டத்தின் கீழ் இது போன்ற 51 வழக்குகள் தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையப் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையின் போது பயணிகள் கவனக் குறைவாக அல்லது தெரிந்தே வெடிமருந்துகளுடன் வந்திருக்கும் வழக்குகளும் இடம் பெற்றுள்ளன.

விமான நிலையத்தில் வெடிமருந்து பொருள்களை எடுத்து வருவது ஜாமீனில் வெளிவர முடியாத குற்றம் என்று பொதுமக்களுக்கு தெரிவித்து வருகிறோம். இருப்பினும், பயணிகளின் சாமான்களில் வெடிமருந்துகள் அல்லது தோட்டாக்கள் கண்டறிப்படும் சம்பவங்கள் நிகழ்கின்றன. இது கவலைக்குரிய விஷயம் என்றாா்அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com