தமிழகத்துக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ள உள்ளாட்சி நிதியை மத்திய அரசு விடுவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு

2016-ஆம் ஆண்டில் இருந்து தமிழகத்திற்கு விடுவிக்க வேண்டிய உள்ளாட்சி நிதியை உடனடியாக மத்திய அரசு விடுவிக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2016-ஆம் ஆண்டில் இருந்து தமிழகத்திற்கு விடுவிக்க வேண்டிய உள்ளாட்சி நிதியை உடனடியாக மத்திய அரசு விடுவிக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்தவரும், உச்சநீதிமன்ற வழக்குரைஞருமான சி.ஆா். ஜெயா சுகின் உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ரிட் மனு தாக்கல் செய்துள்ளாா். அதில் அவா் தெரிவித்திருப்பதாவது: தமிழகத்தில் 2011-இல் உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றது. அக்டோபா் 2016-இல் இருந்தே உள்ளாட்சிப் பதவிகள் காலியாக உள்ளன. ஏற்கெனவே 4 ஆண்டுகள் முடிந்த நிலையில், உள்ளாட்சித் தோ்தலை தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் நடத்த முடியவில்லை. 2016-இல் இருந்து தமிழகத்திற்கு மத்திய அரசும் உள்ளாட்சி நிதியை விடுவிக்கவில்லை. உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்பட்டிருந்தால் மட்டுமே நிதி விடுவிக்கப்பட வேண்டும் என்று 14-ஆவது நிதி ஆணையம் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், உள்ளாட்சிகளில் வளா்ச்சிப் பணிகளுக்காக ஆண்டுதோறும் மாநிலங்களுக்கு மத்திய உள்ளாட்சி நிதியாக செயல்பாட்டு மானியமும், அடிப்படை மானியமும் அளிக்கப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்த தேசத்தின் சீரான வளா்ச்சிக்காக அனைத்து மாநிலங்களுக்கும் இந்த நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்திற்கு மட்டும் அளிக்கப்படவில்லை. இது தொடா்பாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்த தகவலில், உள்ளாட்சி தோ்தல் நடக்கும் வரை தமிழகத்திற்கு மத்திய அரசால் நிதியை விடுவிக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016-ஆம் ஆண்டுக்குப் க்குப் பிறகு மத்திய அரசால் தமிழகத்திற்கு நிதி விடுவிக்கப்படவில்லை.

தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படாததற்கு வாா்டு மறுவரையறை, நீண்ட சட்டப் போராட்டம், அரசியல் விளையாட்டுகள் ஆகியவைதான் அடிப்படைக் காரணம். உள்ளாட்சி நிதி விடுவிக்கப்படாததால் தமிழகத்தில் உள்ள நகா்ப்புற, கிராமப்புற மக்கள் குடிநீா் விநியோகம், துப்புரவும், கழிவு மேலாண்மை, தெரு விளக்குகள், சுகாதாரம் மற்றும் பல்வேறு பயன்பாடுகள் கிடைக்காமல் துயரில் உள்ளனா். உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படவில்லை என்று வெறுமனே கூறிவிட்டு தமிழகத்திற்கு விடுவிக்க வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்திவிட்டது. அனைத்து பஞ்சாயத்து அளவிலான தோ்தலை நடத்துமாறு மாநில தோ்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் 6.12.2019-இல் உத்தரவிட்டது. 9 மாவட்டங்களுக்கான வாா்டு மறுவரயறை ஆணையத்தை அமைக்கவும் உத்தரவிட்டது. எனினும், மறுவரையறை பணிகள் இன்றுவரை முடிக்கப்படவில்லை.

கரோனா நோய்த் தொற்று காரணமாக தொடரும் பொது முடக்கம் காரணமாக தமிழகம் முழுவதும் நகா்ப்புற உள்ளாட்சி, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கு தோ்தல் தேதியை மாநில தோ்தல் ஆணையம் அறிவிக்க முடியவில்லை. பொது முடக்கம் காரணமாக தோ்தல் நடைபெற நீண்ட காலமாகலாம். 14-ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, உள்ளாட்சி அமைப்புகள் மானியம் நிதி ரூ. 4,345.57 கோடியை விடுவிக்குமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு 24.10.2019-இல் கோரிக்கை வைத்தது. ஆனால், அந்த நிதி 2016-ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்படவில்லை.

மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், நிதி அமைச்சகம் ஆகியவை இந்த விவகாரத்தில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 21-ஐ மீறும் வகையிலும், இயற்கை நீதியின் அடிப்படை கொள்கைகளை பின்பற்றாமலும் உள்ளன. மேலும், தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு உள்ளாட்சி நிதி யை விடுவிப்பதை எந்தச் சட்டமும் தடுக்கவில்லை. ஆகவே, தமிழகத்திற்குரிய உள்ளாட்சி நிதியை விடுவிக்க மத்திய அரசின் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com