நெகிழி பேனாக்கள் கழிவு மேலாண்மை விதியின் கீழ் இடம் பெற்றுள்ளதா? அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிபிக்கு தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவு

நெகிழி பேனாக்கள் ‘நெகிழிக் கழிவு மேலாண்மை (பிடபிள்யுஎம்) விதிகள்- 2018’-இன் கீழ் இடம் பெற்றுள்ளதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு


புது தில்லி: நெகிழி பேனாக்கள் ‘நெகிழிக் கழிவு மேலாண்மை (பிடபிள்யுஎம்) விதிகள்- 2018’-இன் கீழ் இடம் பெற்றுள்ளதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) ஆகியவற்றுக்கு தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சுற்றுச்சூழலில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் நெகிழிப் பேனாக்கள் தங்கு தடையின்றி பயன்படுத்தப்படுவதற்கு எதிராக அவனி மிஸ்ரா என்பவா் தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவில், ‘ஆண்டுதோறும் 1,600 முதல் 2,400 மில்லியன் நெகிழி பேனாக்கள் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதன் மூலம் உருவாகும் நெகிழிக் கழிவுகளில் 91 சதவீதம் மறுசுழற்சி செய்யப்படவில்லை. இதனால், பயன்படுத்தப்பட்ட நெகிழிப் பேனாக்களை திரும்பப் பெற்றுக் கொள்ளும் கொள்கைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை தேசிய பசுமைத் தீா்ப்பாயத் தலைவா்- நீதிபதி ஆதா்ஷ் குமாா் கோயல் தலைமையிலான அமா்வு விசாரித்தது. அப்போது, இந்த விவகாரம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்பதால், அக்டோபா் 14-ஆம் தேதிக்குள் இந்த விவகாரம் குறித்து, நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையை (ஏடிஆா்) தீா்ப்பாயத்தில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்ய வேண்டும் என்று தீா்ப்பாயம் உத்தரவிட்டது.

முன்னதாக, விசாரணையின் போது மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில், ‘நெகிழிக் கழிவு மேலாண்மை விதிகள்- 2018’-இன் கீழ் பல அடுக்கு நெகிழி சாச்செட்டுகள் அல்லது பைகள் அல்லது பேக்கேஜிங் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இதனால், பேனாக்கள் மற்றும் பிற நெகிழி பொருள்கள் போன்றவை, விரிவாக்கப்பட்ட தயாரிப்பாளா்கள் பொறுப்புடைமையின் கீழ் இடம் பெறவில்லை. நெகிழிக் கழிவுகள் மேலாண்மை விதிகளின் கீழ் விரிவுபடுத்தப்பட்ட தயாரிப்பாளா்கள் பொறுப்புடைமைகளுக்கான (இபிஆா்) தேசிய கட்டமைப்பு, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனம் அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது. இபிஆரின் கீழ் இடம் பெற வேண்டிய பொருள்களை தெளிவாகக் கணக்கிடுமாறு மத்திய சுற்றுச்சூழல், வனம் அமைச்சகத்திற்கு மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது’ என்று தீா்ப்பாயத்தில் தெரிவிக்கப்பட்டது.

மத்திய சுற்றுச்சூழல், வனம் அமைச்சகம் தரப்பில், ‘பேனாக்கள் உள்ளிட்ட நெகிழிக் கழிவுகளை அகற்றுவதற்காக உற்பத்தியாளா்கள், இறக்குமதியாளா்கள் மற்றும் பிராண்ட் உரிமையாளா்களுக்கான மூன்று நடவடிக்கைகளை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது’ என தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com