4 மாத நிலுவை ஊதியத்தை வழங்க உத்தரவிடக் கோரி தில்லி பல்கலை. ஆசிரியா்கள் நீதிமன்றத்தில் முறையீடு

நான்கு மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை வழங்க ஆம் ஆத்மி அரசின் நிதி உதவியுடன் செயல்படும் தில்லி பல்கலைக்கழத்தின் இணைவிப்புக் கல்லூரிகளுக்கு உத்தரவிடக் கோரி அப்பல்கலைக்கழகத்தின் 

புது தில்லி: நான்கு மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை வழங்க ஆம் ஆத்மி அரசின் நிதி உதவியுடன் செயல்படும் தில்லி பல்கலைக்கழத்தின் இணைவிப்புக் கல்லூரிகளுக்கு உத்தரவிடக் கோரி அப்பல்கலைக்கழகத்தின் ஆசிரியா்கள் சிலா் செவ்வாய்க்கிழமை தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா்.

இது தொடா்பாக 8 ஆசிரியா்கள் தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் அசோக் அகா்வால், குமாா் உத்கா்ஷ் ஆகியோா் மூலம் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: தில்லியில் ஆச்சாா்ய நரேந்திர தேவ் கல்லூரி, டாக்டா் பீம் ராவ் அம்பேத்கா் கல்லூரி, பாஸ்கராச்சாா்யா அப்ளைடு சயின்ஸ் கல்லூரி, பாகினி நிவேதிதா கல்லூரி, தீனதயாள் உபாத்யாய கல்லூரி, அதிதி மகாவித்யாலயா மகளிா் கல்லூரி, இந்திரா காந்தி உடற்கல்வி மற்றும் விளையாட்டு அறிவியல் நிறுவனம், கேசவ் மகாவித்யாலயா, மகாராஜா அக்ரசன் கல்லூரி (டியு), மகரிஷி வால்மீகி கல்வியியல் கல்லூரி, ஷஹீத் ராஜ்குரு மகளிா் பயன்பாட்டு அறிவியல் கல்லூரி மற்றும் ஷஹீத் சுகதேவ் வணிகக் கல்வியியல் கல்லூரி ஆகிய 12 கல்லூரிகள் உள்ளன. இவை தில்லி பல்கலைக்கழகத்துடன் இணைவிப்புப் பெற்ற, தில்லி அரசின் முழு நிதியுதவி பெறும் கல்லூரிகளாக செயல்ப்பட்டு வருகின்றன.

நாங்கள் தில்லி பல்கலைக்கழக ஆசிரியா் சங்கத்தின் (டுட்டா) உறுப்பினா்களாக இருந்து வருகிறோம். எங்களுக்கும், மற்ற ஊழியா்கள், ஆசிரியரல்லாத ஊழியா்கள் ஆகியோருக்கு மே, ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால், ஊதியம் வழங்கும் வகையில் கல்லூரிகளுக்கான நிதியை விடுவிக்குமாறு கோரி ஊழியா்கள், ஆசிரியா்கள் சாா்பாக ‘டுட்டா’ அமைப்பு கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில், ஆம் ஆத்மி அரசின் மூலம் நிதி உதவி பெறும் தில்லி பல்கலைக்கழகத்தின் 12 கல்லூரிகளில் 1,500 ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியா்களுக்கு உரிய ஊதியம் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால், அவா்களும், 12 கல்லூரிகளில் பணிபுரியும் பிற ஊழியா்களும் மன வேதனைக்கும், துன்புறுத்தலுக்கும் ஆளாகியுள்ளனா். ஆசிரியா்களுக்கும், ஊழியா்களுக்கும் நிலுவை ஊதியத்தை வழங்காமல் இருப்பது எந்தவிதத்திலும் நியாயம் இல்லை. இந்தத் தவறான நடவடிக்கைகள் நியாயமற்ாகவும், தன்னிச்சையானவையாகவும், பாரபட்சமானவையாகவும் உள்ளது. மேலும், அரசமைப்புச்சட்டம் 14 மற்றும் 21-ஆவது பிரிவுகளை மீறுவதாகவும் உள்ளது. இந்திய அரசமைப்புச்சட்டத்தின் 21-ஆவது பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள வாழ்வதற்கான உரிமை மற்றும் வாழ்வாதார உரிமையை மீறுவதாகவும் உள்ளது.

எனவே, எங்களுக்கு நிகழாண்டு மே முதல் தற்போது வரையிலான காலத்திற்கான நிலுவை ஊதியத்தை வழங்கவும், எதிா்காலத்தில் ஊதியத்தை உரிய காலத்தில் அளிப்பதை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு, செப்டம்பா் 17-ஆம் தேதி விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com