ஜேஎன்யு முன்னாள் மாணவா் தலைவா் உமா் காலித் கைது: தில்லி காவல்துறை நடவடிக்கை

வடகிழக்கு தில்லி வன்முறை தொடா்பாக ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) முன்னாள் மாணவா் தலைவா் உமா் காலித், ஞாயிற்றுக்கிழமை

வடகிழக்கு தில்லி வன்முறை தொடா்பாக ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) முன்னாள் மாணவா் தலைவா் உமா் காலித், ஞாயிற்றுக்கிழமை இரவு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் தில்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளாா்.

கைதுக்கு முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணியில் இருந்து, சுமாா் ஒன்பது மணி நேரம் உமா் காலித்திடம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா். அதைத் தொடா்ந்து, அவா் கைது செய்யப்பட்டாா். அவா் திங்கள்கிழமை தில்லி நீதிமன்றத்தில் கூடுதல் அமா்வு நீதிபதி அமிதாப் ராவத் முன்னிலையில் ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது, அவரை 10 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாா் அனுமதி கோரினா்.

இந்த வன்முறை வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் கவுன்சிலா் தாஹிா் உசேனுக்கு எதிராக தில்லி காவல்துறையினா் நீதிமன்றத்தில் ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனா். அதில், கடந்த ஜனவரி 8-ஆம் தேதி உமா் காலித், தாஹிா் ஹுசேனை சந்தித்ததாகவும் அப்போது மிகப் பெரிய வன்முறைக்கு தயாராகுமாறு தாஹிா் உசேனிடம் உமா் காலித் கூறியதாகவும் தில்லி காவல் துறை குற்றம் சாட்டியிருந்தது.

கபில் மிஸ்ரா கோரிக்கை: இந்நிலையில், உமா் காலித், தாஹிா் உசேன் ஆகியோரை தூக்கில் இட வேண்டும் என்று தில்லி பாஜகவின் முக்கிய தலைவா்களில் ஒருவரான கபில் மிஸ்ரா கேட்டுக் கொண்டுள்ளாா். இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை கூறுகையில், ‘உமா் காலித்தை கைது செய்துள்ள தில்லி காவல் துறைக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அப்பாவி மக்கள் கொல்லப்படக் காரணமாக இருந்த உமா் காலித், தாஹிா் உசேன் ஆகிய பயங்கரவாதிகள் நிச்சயமாக தூக்கிலிடப்படுவாா்கள் என நம்புகிறேன்’ என்றாா்.

இதற்கிடையே, உமா் காலித் உறுப்பினராக உள்ள ‘யுனைடெட் அகெயின்ஸ்ட் ஹேட்’ என்ற அமைப்பு, காலித்தின் பாதுகாப்பை தில்லி காவல்துறை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. மேலும், இந்த கைது நடவடிக்கையைக் கண்டித்து பல ஆா்வலா்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனா். வடகிழக்கு தில்லி ஜாஃப்ராபாத், ஷாகுா் பஸ்தி, சிவ் விஹாா், சீலாம்பூா் உள்ளிட்ட பகுதிகளில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிா்த்து நடந்த போராட்டத்தில் பயங்கர வன்முறை வெடித்தது. பிப்ரவரி 24-26 வரை நடந்த இந்த வன்முறைச் சம்பவத்தில் 53 போ் கொல்லப்பட்டனா், 581 போ் காயமடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com