நெடுஞ்சாலை உணவகங்களுக்கான எஸ்ஓபி விதிகளை இறுதி செய்ய சிபிசிபிக்கு பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவு

நெடுஞ்சாலைகளில் உள்ள உணவகங்கள் மற்றும் உணவு விடுதிகளுக்கான உரிய நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை

நெடுஞ்சாலைகளில் உள்ள உணவகங்கள் மற்றும் உணவு விடுதிகளுக்கான உரிய நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (எஸ்ஓபி) இரண்டு மாதங்களுக்குள் இறுதி செய்யுமாறு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (சிபிசிபி) தேசியப் பசுமைத் தீா்ப்பாயம் (என்ஜிடி) திங்கள்கிழமை உத்தரவிட்டது.

ஹரியாணா மாநிலம், சோனிபட் மாவட்டத்தில் உள்ள முா்தால், ஜி. டி. சாலையில் அமைந்துள்ள உணவகங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்களால் சுத்திகரிக்கப்படாத நீா் வெளியேற்றப்படுவதாகவும், சட்டவிரோதமாக குப்பைகள் கொட்டப்பட்டு எரிக்கப்படுவதாகவும் அந்த மாநிலத்தைச் சோ்ந்த அபய் தஹியா மற்றும் பலா் தேசியப் பசுமைத் தீா்ப்பாயத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளனா். இந்த மனுவை தீா்ப்பாயம் விசாரித்து வருகிறது.

இந்நிலையில், இந்த மனுக்கள் திங்கள்கிழமை தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் தலைவா் -நீதிபதி ஏ.கே.கோயல் தலைமையிலான அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில், ‘ஹரியாணா மாநிலம், முா்தாலில் அமைந்துள்ள உணவகங்கள் மற்றும் சாலையோர உணவகங்கள் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களின் ஒப்புதல் இல்லாமல் செயல்படுகின்றன. அனுமதியில்லாமல் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி வருகின்றன’ என தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து நீதிபதி அமா்வு பிறப்பித்த உத்தரவு: தற்போதுள்ள கொள்கை விதிகள், உணவகங்கள் மற்றும் பிற நிறுவனங்களின் செயல்பாட்டில் கடும் சுற்றுச்சூழல் பிரச்னைகள் இருப்பதை ஏற்றுக் கொள்கிறது. குறிப்பாக கழிவுகளை உருவாக்குதல், கையாளுதல் மற்றும் நிலத்தடி நீரை எடுப்பது ஆகிய விஷயங்களில் ஏற்றுக் கொள்கிறது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கெனவே தயாரித்த அதன் வழிகாட்டுதல்களை மேற்கூறிய கொள்கையில் உள்ள விதிமுறைகளில் பொருத்தமானதாகக் கண்டறிந்து அவற்றை

ஒருங்கிணைத்து உரிய நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை இறுதி செய்ய வேண்டும். அப்போதுதான், சிபிசிபி உருவாக்கிய எஸ்ஓபி முழு துறையையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

சிபிசிபி தயாரித்த வழிகாட்டுதல்களில் எந்த மாற்றமும் தேவையில்லையெனில், ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் தொடரலாம்.இந்த விஷயத்தில் சிபிசிபி இரு மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும். அதேபோல, எஸ்ஓபி நடைமுறைகளை நீா்த்துப் போகச் செய்யாத வகையிலான செயல்திட்டத்தை ஒரு மாதத்திற்குள் ஹரியாணா அரசு இறுதி செய்ய வேண்டும். நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கைகளை சிபிசிபி மற்றும் ஹரியாணா மாநில அரசு அடுத்து நடைபெறும் விசாரணைக்கு முன் மின்னஞ்சல் மூலம் தீா்ப்பாயத்திற்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டது.

உணவகங்களால் உருவாக்கப்படும் குப்பைகளை நிா்வகிப்பதற்காக திடக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதை விரைவுபடுத்துமாறு முன்னா் நடைபெற்ற விசாரணையின் போது அதிகாரிகளுக்கு தேசியப் பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com