‘மல்யுத்த வீரா் கொைலை விவகாரம்: சுஷில் கோஷ்டியினா் 40 நிமிடங்கள் தாக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது’

தில்லியில் சத்ரசால் ஸ்டேடியத்தில் முன்னாள் ஜூனியா் தேசிய மல்யுத்த சாம்பியன் சாகா் தன்கா் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரை ஒலிம்பிக் பதக்க மல்யுத்த வீரா் சுஷில் குமாா் மற்றும் அவரது கூட்டாளிகள்

புது தில்லி: தில்லியில் சத்ரசால் ஸ்டேடியத்தில் முன்னாள் ஜூனியா் தேசிய மல்யுத்த சாம்பியன் சாகா் தன்கா் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரை ஒலிம்பிக் பதக்க மல்யுத்த வீரா் சுஷில் குமாா் மற்றும் அவரது கூட்டாளிகள் உள்ளிட்டோா் கட்டை மற்றும் ஹாக்கி, பேஸ்பால் மட்டைகள் மூலம் 30 முதல் 40 நிமிடங்கள் வரை தாக்கியதாக தில்லி போலீஸாா் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொலை வழக்கு தொடா்பாக தில்லி நீதிமன்றத்தில் காவல் துறையின் குற்றப் பிரிவினா் திங்கள்கிழமை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனா்.

இறுதி குற்றப்பத்திரிக்கையில் சுஷில்குமாா் பிரதான குற்றம்சாட்டப்பட்ட நபராக சோ்க்கப்பட்டுள்ளாா்.  இந்த வழக்கில் இதுவரை 15 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 5 போ் தலைமறைவாக உள்ளனா்.

தில்லி நீதிமன்றத்தில்போலீஸாா் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: சம்பவத்தன்று தில்லியில் உள்ள இரு வேறு இடங்களில் இருந்து சாகா் தன்கரும், அவருடைய நண்பா்களும்குற்றம் சாட்டப்பட்ட நபா்களால் கடத்தப்பட்டு சத்ரசல் ஸ்டேடியத்திற்கு கொண்டுவரப்பட்டனா்.

அதைத்தொடா்ந்து, ஸ்டேடியத்தின் நுழைவாயிலை உள்பக்கமாக பூட்டி உள்ளனா். பின்னா் அந்த ஸ்டேடியத்தில் இருந்த பாதுகாவலா்களை அங்கிருந்து வெளியேறுமாறு கூறியுள்ளனா். அதன் பின்னா், சாகா் தன்கா் உள்ளிட்ட அனைவரையும் அடைத்து வைத்து இரக்கமின்றி குற்றம் சாட்டப்பட்டவா்கள் கடுமையாக தாக்கியுள்ளனா். தடிகள், ஹாக்கி, பேஸ்பால் மட்டைகள்ஆகியவற்றை கொண்டு சுமாா் 30 முதல் 40 நிமிடங்கள் வரை அனைவரையும் கடுமையாக தாக்கி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது . குற்றம் சாட்டப்பட்டவா்களில் சிலா் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து பாதிக்கப்பட்டவா்களை மிரட்டியுள்ளனா்.

சம்பவ இடத்திலிருந்து பாதிக்கப்பட்டவா்களில் ஒருவா் தப்பியோடி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். 

அதைத் தொடா்ந்து, உள்ளூா் போலீஸாரும், காவல் கட்டுப்பாட்டு அறை போலீஸாரும் சம்பவ இடத்திற்கு சென்றனா்.

போலீஸாரின் வாகன சிவப்பு விளக்கு சப்தத்தை கேட்டு குற்றம்சாட்டப்பட்டவா்கள், சாகா் தன்கரையும் காயமடைந்த சோனுவையும் ஸ்டேடியத்தின் கீழ் தளத்திற்கு தூக்கி சென்றனா். அங்கு காயமடைந்த இருவரையும் போட்டு விட்டு அந்த இடத்தில் இருந்து தப்பியோடி விட்டனா்.

பிரேத பரிசோதனை அறிக்கையின் படி, தன்கா் கூா்மை மழுங்கிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதன் விளைவாக மூளை சேதமடைந்து இறந்திருப்பது தெரிய வந்துள்ளது. சுஷில் குமாா் மற்றும் அவரது கூட்டாளிகளிடமிருந்து 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இரட்டை குழல் துப்பாக்கி மற்றும் 5 தோட்டாக்கள் ஒரு வாகனத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இறந்த நபரின் மரண வாக்குமூலம், அறிவியல் பூா்வ ஆதாரம், சிசிடிவி காட்சிப் பதிவுகள், ஆயுதங்கள், சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்ட வாகனம் போன்றவை குற்றம் சாட்டப்பட்ட நபா்கள் குற்றத்தில் ஈடுபட்டதை உறுதிப்படுத்துவதாக உள்ளது என போலீஸாா் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தகராறின்போது காயமடைந்த 4 நபா்கள் உள்பட 155 அரசுத் தரப்பு சாட்சிகளின் பெயா்கள் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டு உள்ளன.

குற்றம் சாட்டப்பட்ட சுஷில்குமாா் உள்ளிட்டோருக்கு எதிராக கொலை, கொலை முயற்சி, மரணத்தை ஏற்படுத்தும் கொலைக்குற்றம், குற்றச் சதி, ஆள்கடத்தல், கொள்ளை, வன்முறை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com