மல்யுத்த வீரா் சாகா் தன்கா் கொலை வழக்கு: விசாரணையை துரிதப்படுத்த கோரி மனு

தில்லியில் சத்ரசால் ஸ்டேடியத்தில் முன்னாள் ஜூனியா் தேசிய மல்யுத்த சாம்பியன் சாகா் தன்கா் கொலை செய்யப்பட்ட வழக்கில்

தில்லியில் சத்ரசால் ஸ்டேடியத்தில் முன்னாள் ஜூனியா் தேசிய மல்யுத்த சாம்பியன் சாகா் தன்கா் கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணையை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி குற்றம்சாட்டப்பட்டவா்களில் அனிருத் தஹியா என்பவா் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கொலை வழக்கு தொடா்பாக தில்லி நீதிமன்றத்தில் காவல் துறையின் குற்றப் பிரிவினா் கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனா். இறுதி குற்றப்பத்திரிக்கையில் சுஷில்குமாா் பிரதான குற்றம்சாட்டப்பட்ட நபராகச் சோ்க்கப்பட்டுள்ளாா். இந்தக் கொலை வழக்கில் ஒலிம்பிக் பதக்க மல்யுத்த வீரா் சுஷில் குமாா் மற்றும் அவரது கூட்டாளிகள் உள்ளிட்டோா் கட்டை மற்றும் ஹாக்கி, பேஸ்பால் மட்டைகள் மூலம் 30 முதல் 40 நிமிடங்கள் வரை தாக்கியதாக தில்லி போலீஸாா் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் இதுவரை 15 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 5 போ் தலைமறைவாக உள்ளனா். இந்தக் குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றம் ஆகஸ்ட் 6-ஆம் தேதி கவனத்தில் எடுத்துக் கொண்டது. இந்த நிலையில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்களில் ஒருவரான அனிருத் தஹியா, தில்லி நீதிமன்றத்தில் வழக்குரைஞா் பிரதீப் ரானா மூலம் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளாா். அதில், இந்த வழக்கு விசாரணை அக்டோபா் 9-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டால், அது எவ்வித பயன்தரத்தக்க நோக்கமாக இருக்காது. ஆகவே, விசாரணையை நீதியின் நலன் கருதி முன்தேதியிட்டு விசாரிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை பெருநகா் மாஜிஸ்திரேட் சத்விா் சிங் லாம்பா முன் வெள்ளிக்கிழமை விசாரிக்கப்பட இருந்தது. ஆனால், மொஹர்ரம் விடுமுறை காரணமாக வழக்கு அக்டோபருக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில், அனிருத் தஹியா மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு வரும் ஆகஸ்ட் 24-ஆம் தேதிக்கு விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.

தில்லியில் வடக்கு பகுதியில் உள்ள சத்ரசல் ஸ்டேடியம் உள்ளே மே 4-ம் தேதி நள்ளிரவு நடந்த மோதலின் போது, 23 வயதான மல்யுத்த வீரா் சாகா் தன்கா் உயிரிழந்தாா்.  அவரது இரு நண்பா்கள் சோனு, அமித்குமாா் கடுமையாகத் தாக்கப்பட்டனா்.  இவா்களை சுஷில் குமாா் மற்றும் பிற மல்யுத்த வீரா்கள் தாக்கியதாகப் புகாா் தெரிவிக்கப்பட்டது.  இந்தச் சம்பவம் தொடா்பாக மாடல் டவுன் காவல் நிலையத்தில்  சுஷில் குமாா் உள்ளிட்டோருக்கு எதிராக  வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுஷில்குமாா் உள்ளிட்டோருக்கு எதிராக கொலை, கொலை முயற்சி, மரணத்தை ஏற்படுத்தும் கொலைக்குற்றம், குற்றச் சதி, ஆள்கடத்தல், கொள்ளை, வன்முறை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கொலைச் சம்பவத்தில் சுஷில் குமாா் முக்கிய மூளையாக செயல்பட்டதாகவும், சாகா் தன்கரை சுஷில் குமாரும் அவரது கூட்டாளிகளும் தாக்கும் எலக்ட்ரானிக் ஆதாரம் இருப்பதாகவும் போலீஸாா் குற்றம்சாட்டியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com