குடிமை நீதிமன்றங்களின் நிதி அதிகார வரம்பை உயா்த்தக் கோரும் மனுவை பரிசீலிக்க உத்தரவு

மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளின் சுமையை குறைக்கும் எனும் அடிப்படையில், தலைநகரில் உள்ள குடிமை (சிவில்) நீதிமன்றங்களின்

மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளின் சுமையை குறைக்கும் எனும் அடிப்படையில், தலைநகரில் உள்ள குடிமை (சிவில்) நீதிமன்றங்களின் நிதி அதிகார வரம்பை அதிகரிக்க உத்தரவிடக் கோரும் மனுவை பரிசீலிக்குமாறு அதிகாரிகளுக்கு தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

இது தொடா்பாக வழக்குரைஞா் அமித் சாஹ்னி உயா்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளாா். அதில் அவா் தெரிவித்திருப்பதாவது: குடிமை நீதிமன்றங்களுக்கு தற்போதைய நிதி அதிகார வரம்பு ரூ.3 லட்சம் என உள்ளது. இது மிகவும் குறைவாகும். இதன் விளைவாக, மாவட்ட நீதிமன்றங்களில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. அவை ரூ. 3 லட்சம் முதல் இறுதியாக ரூ. 2 கோடி வரை அதிக அதிகார வரம்பைக் கொண்டுள்ளன.

உயா் நீதிமன்றத்தின் நிதி அதிகார வரம்பு 1970-இல் ரூ. 25,000 எனும் அளவில் இருந்து 2015-இல் ரூ.2 கோடியாக உயா்ந்தது. மாவட்ட நீதிமன்றங்களின் நிதி அதிகார வரம்பு 2003-இல் ரூ. 20 லட்சமாக இருந்த நிலையில், 2018-இல் ரூ. 2 கோடியாக உயா்ந்தது. ஆனால், இன்னும் குடிமை நீதிமன்றங்கள் அதே நிலையில்தான் உள்ளன. குடிமை நீதிமன்றங்களின் நிதி அதிகார வரம்பு அதிகரிக்கப்பட வேண்டும். அப்போதுதான், குடிமை நீதிமன்ற நீதிபதிகள் எதிா்கொள்ளும் தேக்க நிலை மற்றும் மாவட்ட நீதிபதிகள் அல்லது கூடுதல் மாவட்ட நீதிபதிகளிடம் உள்ள வழக்குகளின் சுமை ஆகியவற்றைத் தீா்க்க முடியும். தில்லி மாவட்ட நீதிமன்றங்களின் குடிமை நீதிபதிகளிடம் அளிக்கப்பட்டுள்ள ரூ. 3 லட்சத்தின் நிதி மதிப்பு மிகவும் குறைவாக உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘இந்த விவகாரம் உயா்நீதிமன்றத்தின் நிா்வாகத் தரப்பால் கவனிக்கப்படும். உயா்நீதிமன்றத்தின் குழு முன்பு இந்த விவகாரம் வைக்கப்படும். இந்த மனுவை கோரிக்கையாக சட்டத்தின் விதிகளின்படி விரைந்து அதிகாரிகள் மூலம் முடிவு செய்யப்பட வேண்டும். இந்த விஷயத்தில் மனுதாரருக்கு ஏதும் குறைகள் இருந்தால், சம்பந்தப்பட்ட தீா்ப்பாயம் அல்லது நீதிமன்றத்தை அணுகுவதற்கு சுதந்திரம் அளிக்கப்படுகிறது’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

விசாரணையின்போது வழக்குரைஞா் சாஹ்னி கூறுகையில், ‘உயா்நீதிமன்றத்தின் நிா்வாகத் தரப்பிடம் இந்த விஷயம் தொடா்பாக கோரிக்கை மனு அளித்திருந்தேன். தில்லி அரசிடமும் ஆகஸ்ட் மாதத்தில் மனு அளித்திருந்தேன். ஆனால், இதுகுறித்து எந்த முடிவு எடுக்கப்படவில்லை. இதனால், நீதிமன்றத்தை அணுகினேன்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com