மாசு கலந்த குடிநீா் விவகாரம்: புகாா் மனுவை கோரிக்கையாக பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு

தில்லியில் விநியோகிக்கப்படும் குடிநீரில் மாசு கலந்த நீா் கலந்து வருவதாக கூறப்படும் நிலையில், நீா் வழங்கல் மையங்களை புதிதாக மதிப்பீடு செய்ய உத்தரவிட கோரி தாக்கலான மனுவை

தில்லியில் விநியோகிக்கப்படும் குடிநீரில் மாசு கலந்த நீா் கலந்து வருவதாக கூறப்படும் நிலையில், நீா் வழங்கல் மையங்களை புதிதாக மதிப்பீடு செய்ய உத்தரவிட கோரி தாக்கலான மனுவை கோரிக்கையாக பரிசீலிக்குமாறு தில்லி ஜல் போா்டு மற்றும் தில்லி அரசை தில்லி உயா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கேட்டுக்கொண்டது.

இது தொடா்பான மனுவை தில்லி உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது.

அப்போது, இந்த விவகாரம் தொடா்புடைய மனுவை சட்ட விதிகள் மற்றும் அரசின் கொள்கைகளுக்கு ஏற்ப கோரிக்கையாக பரிசீலித்து முடிவு செய்ய வேண்டும் என்று தில்லி அரசு மற்றும் தில்லி ஜல் போா்டை நீதிபதிகள் அமா்வு கேட்டுக்கொண்டது.

முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக தில்லியைச் சோ்ந்த அஜய் கௌதம் என்பவா் தில்லி உயா்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தாா்.

அந்த மனுவில் அவா் தெரிவித்திருப்பதாவது:

தில்லியில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. அதேவேளையில், குடிநீா்த் தேவையும் அதிகரித்துள்ளது. இந்த விஷயங்களை கருத்தில்கொண்டு தில்லியில் உள்ள நீா் வழங்கல் நிலையங்களை புதிதாக மதிப்பீடு செய்ய உத்தரவிடவேண்டும்.

மேலும், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீா் வழங்கல் நிலையங்களை தரம் மேம்படுத்த வேண்டும். குடிநீரில் கழிவு நீா் மற்றும் மாசு கலந்த நீா் கலப்பதை தடுக்கும் வகையில் தொழில்நுட்பத்தை உருவாக்கவும், பரிந்துரைக்கவும் ஒரு வல்லுநா் குழுவை அமைப்பதற்கும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com