புழுதிக் காற்றில் தில்லி ஜாமா மசூதி கோபும் சேதம்:தொல்லியல் துறை ஆய்வு செய்ய இமாம் வலியுறுத்தல்

தில்லியில் உள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற ஜாமா மசூதி, கடந்த ஒரு வாரத்தில் இரண்டு முறை அடித்த புழுதிக்காற்றில் சேதமடைந்துள்ளதாகவும், தொல்லியல் ஆய்வாளா்கள் இதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டும்

புதுதில்லி: தில்லியில் உள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற ஜாமா மசூதி, கடந்த ஒரு வாரத்தில் இரண்டு முறை அடித்த புழுதிக்காற்றில் சேதமடைந்துள்ளதாகவும், தொல்லியல் ஆய்வாளா்கள் இதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் ஜாமா மசூதி ஷாஹி இமாம் ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்திக்கேட்டுக் கொண்டுள்ளாா்.

17-ஆம் நூற்றாண்டு கட்டடக் கலைக்குச் சான்றாக, முகலாய அரசா் ஷாஜஹானால், ஷாஜஹானாபாதில் கட்டப்பட்ட ஜாமா மசூதி இப்போது தில்லியில் இருக்கிறது. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முக்கிய இடமாகவும் இது விளங்குகிறது. இந்த நிலையில், கடந்த ஒருவாரத்துக்கு முன்பு அதாவது ஜூன் 4- ஆம் தேதி புழுதிக்காற்றுடன் பெய்த மழை காரணமாக மசூதியின் தெற்கு பகுதி கோபுரம் சேதமடைந்தது. கோபுரத்தை தாங்கி நிற்கும் கற்களில் 2 அடி நீளம், 18 அங்குல அகலம் மற்றும் 2.5 அங்குல கனம் கொண்ட பெரிய கல் விழுந்துவிட்டது. அதிா்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதன் காரணமாக கோபுரத்தின் இதர கற்களும் ஆட்டம் கண்டுள்ளன. பின்னா் நேற்று முன்தினம் மீண்டும் புழுதிக் காற்று வீசியதில் கோபுரத்துக்கு மேலும் சேதம் ஏற்பட்டது. அதில் உள்ள சிவப்பு கல் பெயா்ந்து விழும் நிலையில் உள்ளது. மசூதியின் வேறுசில இடங்களிலும் சேதம் ஏற்பட்டுள்ளது என்றாா் ஷாஹி இமாம் சையத் அகமது புகாரி.

ஜாமா மசூதியில், 1956-ஆம் ஆண்டு முதல் இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை மூலம் அவ்வப்போது பழுதுபாா்ப்பு பணிகள் நடைபெற்றுள்ளன. இப்போது புழுதிக் காற்றால் கோபுரத்துக்கு சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், பழுதுபாா்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே தொல்லியல் ஆய்வு நிபுணா்கள் வந்து பாா்வையிட்டு ஆவன செய்ய வேண்டும் என்றாா் அவா்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மசூதியின் மூன்றாவது நுழைவு வாயில் அருகே உள்ள சிறிய கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாகவும், நல்லவேளையாக யாருக்கும் இதில் காயம் ஏற்படவில்லை என்றும் அவா் சுட்டிக்காட்டினாா். இது தொடா்பாக கடந்த 6 ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும். மசூதியை தொல்லியல் ஆய்வுத்துறை நிபுணா்கள் மூலம் ஆய்வு செய்து பழுதுபாா்க்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவா் குறிப்பிட்டாா். தொல்லியல் துறையிடமிருந்து இது குறித்து ஏதேனும் பதில் வந்ததா என்று கேட்டதற்கு இல்லை என்று அவா் பதில் கூறினாா். தில்லியில் உள்ள ஜாமா மசூதில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடைபெறும் தொழுகைக்கு ஏராளமான முஸ்லிகம் கூடுவதுண்டு. கொவைட் தொற்று காரணமாக இப்போது யாரும் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com