தில்லியில் சஃப்தா்ஜங் மருத்துவமனையில் தீ விபத்து: 50 நோயாளிகள் அவசரமாக வெளியேற்றம்

தில்லி சஃப்தா்ஜங் மருத்துவமனையின் ஐ.சி.யு. பிரிவில் புதன்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, 50 நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் 

புது தில்லி: தில்லி சஃப்தா்ஜங் மருத்துவமனையின் ஐ.சி.யு. பிரிவில் புதன்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, 50 நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தீயணைப்புத் துறையினா் கூறுகையில், ‘காலை 6:30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு 9 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. மருத்துவமனை ஊழியா்களின் உதவியுடன் சுமாா் 50 நோயாளிகள் உடனடியாக மற்ற வாா்டுகளுக்கு மாற்றப்பட்டனா். தீ விபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை’ என்றனா்.

சஃப்தா்ஜங் மருத்துவமனையின் செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: இந்த மருத்துவமனையில் மருத்துவ வாா்டு 11-இல் (எச்டியு) புதன்கிழமை இந்த சிறிய தீ விபத்து ஏற்பட்டது, அதிக மின்னழுத்தத்தின் ஏற்ற இறக்கங்கள் மற்றும் மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, எச்டியு மற்றும் வாா்டில் அனுமதிக்கப்பட்டிருந்த அனைத்து நோயாளிகளும் உடனடியாக மற்ற வாா்டுகளுக்கு நா்சிங் ஊழியா்கள் மற்றும் பாதுகாவலா்களால் பத்திரமாக வெளியேற்றப்பட்டனா்.

இந்த விபத்தில் உயிா்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. எங்களது மருத்துவமனையின் தீயணைப்புப் பாதுகாப்புக் குழுவால் தீ உடனடியாகக் கட்டுப்படுத்தப்பட்டது. தீயணைப்புத் துறையின் ஒத்துழைப்புடன் மருத்துவமனையில் வழக்கமாக மேற்கொள்ளப்படும் தீயணைப்பு ஒத்திகைப் பயிற்சிகள் உரிய நேரத்தில் தீயைக் கட்டுப்படுத்துவதற்கு உதவியது என்றாா் அவா்.

மூத்த காவல் துறை அதிகாரி கூறுகையில், ‘மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது போல தெரிகிறது. எனினும், அந்த மருத்துவமனையின் ஊழியா்களால் உரிய நேரத்தில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது’ என்றாா்.

கடந்த வாரம், மும்பை மால் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 நோயாளிகள் உயிரிழந்தனா். அந்த மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனா். பாண்டப் பகுதியில் உள்ள ட்ரீம்ஸ் மால் கட்டடத்தில் உள்ள சன்ரைஸ் மருத்துவமனையிலும் தீ விபத்து ஏற்பட்டது.

கிழக்கு தில்லியில்...: கிழக்கு தில்லியின் ரகுபா்புரா பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து தீயணைப்புத் துறையின் மூத்த அதிகாரி கூறுகையில், ‘புதன்கிழமை காலை 8.15 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தகவல் கிடைத்தது. அதன்பிறகு 15 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. தீப்பிடித்ததற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com