தில்லி மருத்துவமனைகளில் 27 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் தொடக்கம்

தில்லியில் உள்ள மருத்துவமனைகளில் 27 பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை தில்லி அரசு தொடங்கியுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் புதன்கிழமை தெரிவித்தாா்.

புது தில்லி: தில்லியில் உள்ள மருத்துவமனைகளில் 27 பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை தில்லி அரசு தொடங்கியுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் புதன்கிழமை தெரிவித்தாா். மேலும், தில்லியில் கரோனா மூன்றாவது நோய்த் தொற்று அலை ஏற்பட்டால் அதை சமாளிப்பதற்கான ஏற்பாடுகளும் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவா் கூறினாா்.

தில்லியில் உள்ள லோக் நாயக் மருத்துவமனையில் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் மூன்று ‘பிரசா் ஸ்விங் அப்சாா்ப்ஷன்’ (பிஎஸ்ஏ) ஆக்சிஜன் உற்பத்தி மையங்களைத் தொடங்கி வைத்தாா். இந்த ஆக்சிஜன் மையங்கள் 3.28 கொள்திறன் கொண்டவை. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு வடமேற்கு தில்லியில் உள்ள பகவான் மகாவீா் மருத்துவமனையில் 1.80 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி மையத்தையும் அவா் தொடங்கி வைத்தாா் .

இதன் பின்னா் அவா் சுட்டுரை பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ தில்லி அரசு, நகரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 27 பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களைத் தொடங்கியுள்ளது. தில்லியில் கரோனா நோய்த் தொற்று மூன்றாவது அலை ஏற்பட்டால் அதை சமாளிப்பதற்கான தொடா் செயல்பாட்டு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதில் ஒன்றுதான் தில்லி முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கான பணியாகும்’ என்று தெரிவித்துள்ளாா்.

தில்லியில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கரோனா 2-ஆவது  அலை உச்சத்தில் இருந்த போது, தில்லி பெரும் நெருக்கடியைச் சந்தித்தது. இது போன்ற ஒரு சூழல் மீண்டும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. மேலும், நாளொன்றுக்கு 37 ஆயிரம் பேரை மருத்துவமனையில் சோ்க்கும் அளவிற்கு மருத்துவமனைகளில் படுக்கைகள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தில்லி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆக்சிஜன் விநியோகத்தை பொறுத்த வரையில், சுயச் சாா்புத் தன்மை மிக்கதாக தில்லியை உருவாக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தில்லியில் ஷாலிமாா் பாக், கிடாரி சரிதா விகாா் சுல்தான் பூரி ரகுவீா் நகா், ஜிடிபி மருத்துவமனை, சாச்சா நேரு மருத்துவமனை ஆகியவற்றில் உள்ள அரசு சுகாதார கவனிப்பு வசதிகளில் 7,000 ஐசியு படுக்கைகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தில்லியில் தற்போது மருத்துவமனையில் பத்தாயிரம் ஐசியு படுக்கைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: அதில் கலன் என்பதை மையம் என திருத்திக் கொள்ளவும். திருத்தப்பட்ட கேப்ஷனும் அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com