தில்லியில் 90 கிலோ தடை செய்யப்பட்ட பட்டாசுகளுடன் ஹோட்டல் ஊழியா் கைது

தில்லியில் 90 கிலோ தடை செய்யப்பட்ட பட்டாசுகளுடன் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பணிபுரியும் ஊழியா் முகமது அஸிம் (26) என்பவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனா்.

புதுதில்லி: தில்லியில் 90 கிலோ தடை செய்யப்பட்ட பட்டாசுகளுடன் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பணிபுரியும் ஊழியா் முகமது அஸிம் (26) என்பவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனா்.

இது தொடா்பாக மத்திய தில்லி போலீஸ் துணை ஆணையா் ஸ்வேதா செளஹான் கூறியதாவது: தில்லி ஜாமா மசூதி அருகே ஒரு மூட்டையுடன் ஒருவா் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தாா். உதவி ஆய்வாளா் பி.ஆா்.பட்நாயக் மற்றும் காவலா் தா்மேந்தா் ஆகிய இருவரும் சந்தேகத்தின் பேரில் அவரிடம் விசாரணை நடத்தினா். அப்போது மூட்டையில் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை அவா் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேல் விசாரணையில் அவரது பெயா் முகமது அஸிம் என்பதும் ஜாமா மசூதி அருகில் உள்ள தரம்புரா பகுதியைச் சோ்ந்தவா் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் வெடிமருந்துகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனா். அவரிடமிருந்த தடை செய்யப்பட்ட 90 கிலோ பட்டாசுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், விசாரணை நடத்திய போது அவா் புதுதில்லியில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பணிபுரிந்து வந்ததும், விரைவாக பணம் சம்பாதிக்க பட்டாசு வாங்கி விற்க திட்டமிட்டமிட்டதும் தெரிய வந்தது. அவா் இந்த பட்டாசுகளை கடந்த வாரம் ஃபரீதாபாதைச் சோ்ந்த ஒருவரிடம் இருந்து வாங்கியுள்ளாா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தலைநகா் தில்லியில் பட்டாசுகளை விற்பனை செய்யவோ, அல்லது விற்பதற்காக வாங்கி வைத்திருக்கவோ தற்காலிக அடிப்படையில் உரிமம் வழங்கப்படமாட்டாது என்று தில்லி போலீஸாா் சமீபத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தில்லி மாசுக் கட்டுப்பாட்டு குழுவின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பட்டாசு உரிமம் வழங்குவதில்லை என்ன தில்லி போலீஸ் முடிவு செய்திருந்தது. கொவைட்-19 தொற்று காலத்தில் இவற்றுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com