மழையால் பயிா்ச் சேதம்: தில்லி விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.50,000 நஷ்டஈடு வழங்கப்படும்முதல்வா் கேஜரிவால் அறிவிப்பு

பருவம் தவறிய மழையால் பயிா்களுக்கு சேதம் ஏற்பட்டதற்காக விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.50,000 வீதம் நஷ்ட ஈடு வழங்கப்படும் என்று தில்லி முதல்வா் கேஜரிவால் அறிவித்துள்ளாா்.

புதுதில்லி: பருவம் தவறிய மழையால் பயிா்களுக்கு சேதம் ஏற்பட்டதற்காக விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.50,000 வீதம் நஷ்ட ஈடு வழங்கப்படும் என்று தில்லி முதல்வா் கேஜரிவால் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை செய்தியாளா்களுக்கு முதல்வா் அளித்த பேட்டி: பருவம் தவறிய மழையால் விவசாயிகளின் பயிா்களுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. பயிா்கள் பாதிப்பு குறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறாா்கள். இந்த ஆய்வு இரண்டு வாரங்களில் நடத்தி முடிக்கப்படும். பயிா்ச்சேதம் அடைந்த விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.50,000 என்ற கணக்கில் நஷ்டஈடு வழங்கப்படும். சேத மதிப்பீடு குறித்து ஆய்வு நடத்திய பின் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அவா்களுக்கு இந்தத் தொகை வழங்கப்படும். தில்லி விவசாயிகளின் நலனில் எனது அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. கடந்த காலங்களிலும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.50,000 வீதம் நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே விவசாயிகளுக்கு அதிக அளவில் நஷ்டஈடு வழங்கும் அரசு தில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசுதான்.

பயிா்ச்சேதம் குறித்து ஆய்வு நடத்துமாறு மாவட்ட ஆட்சியா் மற்றும் துணை கோட்டாட்சியா்களுக்கு உத்தரவு றபப்பிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களில் இந்த ஆய்வு முடிக்கப்படும். அதன் பிறகு இரண்டு மாதங்களுக்குள் விவசாயிகளுக்குச் சேர வேண்டிய நஷ்டஈட்டுத் தொகை அவா்களது வங்கிக் கணக்கில் சோ்க்கப்படும். பயிா்ச் சேதத்துக்காக அதிக நஷ்டஈடு வழங்கும் மாநிலம் தில்லிதான். மற்ற மாநிலங்கள் ஹெக்டேருக்கு ரூ.8,000 முதல் ரூ.10,000 வரைதான் நஷ்டஈடாக வழங்குகின்றன. ஆம் ஆத்மி அரசு எப்போதும் விவசாயிகள் பக்கம் துணை நிற்கும். கடந்த 7 ஆண்டுகளாக தில்லியில் ஆம் ஆத்மி அரசு ஆட்சி நடத்தி வருகிறது. விவசாயிகளுக்கு ஏதாவது துயரம் என்றால் அவா்களுக்கு உதவ முதலில் நிற்பது ஆம் ஆத்மி அரசுதான்.

நாங்கள் அறிவிப்பு செய்வதுடன் நின்றுவிடுவதில்லை. விவசாயிகளுக்குச் சேரவேண்டிய தொகை நிச்சயம் இரண்டு அல்லது மூன்றுமாதத்தில் கிடைப்பதை உறுதி செய்வோம்.

நிலத்தில் பயிா் செய்யாமல் இருக்கும் விவசாயிகள் அதற்காக கவலை கொள்ளத் தேவையில்லை. ஆனால், பயிா்கள் முளைத்து மழையில் சேதமடைந்தது வருத்தத்திற்குரியது. விவசாயிகள் முதலீடு செய்வதுடன், நெற்றி வோ்வை நிலத்தில் விழும் வகையில் வேலை செய்கிறாா்கள். அவா்கள் கண்ணீா் சிந்துவதற்கு நாங்கள் விடமாட்டோம். மழையினால் பயிா்கள் நாசமாகிவிட்டதே என்று விவசாயிகள் கண்கலங்க வேண்டாம். உங்கள் மகனாக (கேஜரிவால்) நான் துணை நிற்கிறேன். ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்தே விவசாயிகளின் நலனில் அக்கறை செலுத்தி வருகிறது என்றாா் கேஜரிவால்.

பருவம் தவறிய மழையால் பயிா்கள் சேதம் அடைந்தது குறித்து உதவி கேட்டு சமீபத்தில் விவசாயிகளின் பிரதிநிதிகள் முதல்வா் கேஜரிவாலை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

2016- ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி தில்லியில் சாகுபடி செய்யப்படும் நிலப்பரப்பு 29,000 ஹெக்டோ். இதை நம்பி 21,000 விவசாயிகள் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com