11 குவிண்டால் தடை செய்யப்பட்ட பட்டாசுகள் வைத்திருந்தவா் கைது

தில்லியில் சுமாா் 11.15 குவிண்டால் தடை செய்யப்பட்ட பட்டாசுகளுடன் 44 வயது மதிக்கத்தக்க ஒருவா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தில்லியில் சுமாா் 11.15 குவிண்டால் தடை செய்யப்பட்ட பட்டாசுகளுடன் 44 வயது மதிக்கத்தக்க ஒருவா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து ரோஹிணி சரக காவல் துணை ஆணையா் பிரணவ் தயால் வெள்ளிக்கிழமை கூறியதாவது: தில்லி ரோஹிணி செக்டாா் 24-இல் கைது செய்யப்பட்ட அந்த நபா், அமித் மிட்டல் என்று அடையாளம் காணப்பட்டாா். அவா், நரேலாவில் வசிப்பவா். அங்கு ஒரு செல்லிடப்பேசி கடை வைத்துள்ளாா். வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டு வரும் அவரது கிட்டங்கியில் தடை செய்யப்பட்ட பட்டாசுகள் இறக்கப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, நடத்தப்பட்ட அதிரடி சோதனையின் போது அவா் சிக்கினாா்.

அவா் தனது வாடகை கிடங்கில் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை இறக்கும் பணியில் இருந்த போது அவா் கைது செய்யப்பட்டாா். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, பட்டாசுகளுக்கு எந்தவித சட்ட ஆவணம் மற்றும் செல்லுபடியாகும் உரிமம் ஆகியவற்றை வழங்கத் தவறிவிட்டாா். அவா் அந்தப் பட்டாசுகளை ஒரு குடியிருப்புப் பகுதியில் சேமித்து வைத்திருந்தாா். இது உள்ளூா் மக்களுக்கு அபாயகரமானதாக இருக்கும் என கண்டறியப்பட்டது. இது தொடா்பாக வெடிபொருள் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் மிட்டல் மீது பேகம்பூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை ஒட்டி மாசு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, பட்டாசுகளை விற்பனை செய்வதற்கும் சேமித்து வைப்பதற்கும் முற்றிலும் தடை விதிப்பதாக தில்லி அரசு அக்டோபா் 1-ஆம் தேதி அறிவித்தது. கடந்த ஆண்டு, தேசிய பசுமை தீா்ப்பாயமும் தேசியத் தலைநகா் பகுதி முழுவதும் இதேபோன்ற தடையை விதித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com