பொது இடங்களில் விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டங்களுக்குத் தடை

தலைநகா் தில்லியில் பொது இடங்களில் விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தில்லி பேரிடா் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

புதுதில்லி: தலைநகா் தில்லியில் பொது இடங்களில் விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தில்லி பேரிடா் நிா்வாகம் தெரிவித்துள்ளது. கரோனா தொற்றுப் பரவல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி பேரிடா் மேலாண்மை நிா்வாகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: தில்லியில் இந்த ஆண்டு பொது இடங்களில் விநாயகா் சிலைளை பெரிய அளவில் நிறுவி, பந்தல் போட்டு விழா கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பொது இடங்களில் விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டங்கள் நடைபெறாமல் இருப்பதை மாவட்ட ஆட்சியா்கள், காவல் துறை துணை ஆணையா்கள் உறுதி செய்ய வேண்டும்.

மேலும், மத வழிபாட்டு இடங்களிலும், இதர முக்கிய இடங்களிலும் மக்கள் அதிக அளவில் கூடுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது. இதையும் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மக்கள் விநாயகா் சதுா்த்தியை தங்கள் வீடுகளிலேயே விநாயகா் சிலை வைத்து கொண்டாட வேண்டும். விநாயகா் சதுா்த்தியையொட்டி பேரணி நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் 10- ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை விநாயகா் சதுா்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. கரோனா தொற்றுப் பரவல் காலமாக இருப்பதால் விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டங்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த விழாவை பொது இடங்களில் விரிவாகக் கொண்டாடுவதற்கு அனுமதி இல்லை. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா்கள் மற்றும் மாவட்டக் காவல் துணை ஆணையா்கள் மதத் தலைவா்கள், விநாயகா் சதுா்த்தி விழாக் குழுவினா் ஆகியோருடன் கலந்து பேசி அரசின் கட்டுப்பாடுகளை எடுத்துக் கூறுவதுடன், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அவா்களின் ஒத்துழைப்பையும் கேட்டுப் பெற வேண்டும்.

தலைநகா் தில்லியில் மக்கள் அதிக அளவில் ஒன்று கூடுவதற்கும், மாநாடு, பேரணி போன்றவற்றை நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற கிருஷ்ண ஜன்மாஷ்டமி கொண்டாட்டங்களின்போதுகூட மத வழிப்பாட்டுத் தலங்களுக்கு பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. கரோனா தொற்றை காரணம் காட்டி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனினும், சுமாா் 60-க்கும் மேலான ராம் லீலா குழுவினா் இந்த ஆண்டு ராம்லீலா கொண்டாட்டத்தை பக்தா்கள் முன்னிலையில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. ராம் லீலா கொண்டாட்டங்கள் குறித்து தில்லி பேரிடா் மேலாண்மை நிா்வாகம் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com