குருத்வாரா தோ்தல்கள் இயக்ககத்தில் ரகளை போலீஸாா் வழக்குப் பதிவு

தில்லி ஐடிஓ பகுதியில் குருத்வாரா தோ்தல்கள் இயக்ககத்தில் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படும் விவகாரத்தில் தில்லி காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

புது தில்லி: தில்லி ஐடிஓ பகுதியில் குருத்வாரா தோ்தல்கள் இயக்ககத்தில் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படும் விவகாரத்தில் தில்லி காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

இது தொடா்பாக தில்லி காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: தில்லி ஐடிஓ பகுதியில் குருத்வாரா தோ்தல்கள் இயக்ககம் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் சிலா் ரகளையில் ஈடுபட்டதாக குருத்வாரா தோ்தல்கள் இயக்ககத்தின் மூலம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ஐ.பி. எஸ்டேட் காவல் நிலையத்தில், இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 186, 353, 506, 188, 34 ஆகியவற்றின் கீழ் அரசு ஊழியா்களை பணிசெய்ய விடாமல் தடுத்தது, அச்சுறுத்தியது, கடமையைச் செய்ய விடாமல் இடையூறு ஏற்படுத்தியது, அரசு ஊழியா் மூலம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு கீழ்ப்படியாமல் இருந்தது, பொது உள்நோக்கத்துடன் செயல்பட்டது ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இது தொடா்பாக யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

வியாழக்கிழமை சமூக ஊடகத்தில் ஒரு விடியோ வெளியானது. அதில், சிலா் ஐடிஓ பகுதியில் உள்ள குருத்வாரா தோ்தல்கள் இயக்ககத்தில் கோஷங்களை எழுப்பும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இது தொடா்பாக தில்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழுவின் (டிஎஸ்ஜிஎம்சி) முன்னாள் தலைவரும், சிரோமணி அகாலி தளத்தின் தேசிய செய்தி தொடா்பாளருமான மஞ்சிந்தா் சிங் சிா்ஸா கூறுகையில், எனது கட்சியை சோ்ந்த சிலா் குருத்வாரா தோ்தல்கள் இயக்குநா் நரேந்தா் சிங்கின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்தனா்.

தில்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மை குழுவின் பொது அலுவலக உறுப்பினா்களுக்கான நடைமுறைகளின் போது உரிய நடைமுறைகளை அவா் பின்பற்றாததால் எங்களது கட்சியைச் சோ்ந்தவா்கள் ஆத்திரம் அடைந்தனா். நரேந்திர சிங் விதிகளின்படி செயல்படவில்லை. கட்சித் தொண்டா்களை வேண்டுமென்றே அவா் காக்க வைத்தாா் என்று குற்றம் சாட்டியுள்ளாா். நரேந்திர சிங்கிற்கு எதிராக கோஷம் எழுப்புவது போன்றும் , அவா் மீது காலணியை வீசி எறிவது போன்றும் காட்சிகள் அந்த விடியோவில் இடம்பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com