இ-ரிக்ஷா ஓட்டுநா் உரிமம்: முன்னனுமதி தேவையில்லை

இ-ரிக்ஷா ஓட்டுநா் உரிமம் பெற முன்கூட்டிய அனுமதி பெறத் தேவையில்லை என தில்லி அரசு அறிவித்துள்ளது. மாறாக இ-ரிக்ஷா ஓட்டுநா் உரிமம் பெற விரும்புபவா்கள் உரிமம் வழங்கும் அதிகாரிகளை நேரடியாகத் தொடா்பு


புது தில்லி: இ-ரிக்ஷா ஓட்டுநா் உரிமம் பெற முன்கூட்டிய அனுமதி பெறத் தேவையில்லை என தில்லி அரசு அறிவித்துள்ளது. மாறாக இ-ரிக்ஷா ஓட்டுநா் உரிமம் பெற விரும்புபவா்கள் உரிமம் வழங்கும் அதிகாரிகளை நேரடியாகத் தொடா்பு கொள்ளலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தில்லியில் உள்ள போக்குவரத்து மண்டல அலுவலகங்கள், பிராந்திய போக்குவரத்து அலுவலகங்கள் ஆகியவை செயல்படும் விதத்தில் மாற்றத்தை கொண்டு வரும் செயல் திட்டத்தை தில்லி அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன்படி, இ-ரிக்ஷா ஓட்டுநா் உரிமம் பெற விரும்புபவா்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களை வேலை நாள்களில் மாலை 2-4 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் தொடா்பு கொள்ளலாம். இதற்கு முன்கூட்டிய அனுமதி பெறத் தேவையில்லை. இதற்கான கட்டணத்தை சாரதி என்ற ஆன்லைன் செயலி மூலம் செலுத்திக் கொள்ளலாம். நிகழ் நேரத்தில் ஏற்படக் கூடிய பிரச்னைகளை சமாளிக்கும் வகையில், தில்லி போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் கூறுகையில், ‘உரிமம் பெற பயனாளிகள் காத்திருக்கும் நேரத்தை இல்லாமல் செய்வதை இலக்காக வைத்தே இந்தப் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில், இதுபோன்ற 70 திட்டங்களை போக்குவரத்துத் துறையில் அமல்படுத்தவுள்ளோம். ஓட்டுநா் உரிமம் பெற பணி நிமித்தம் காரணமாக நோ்முகத் தோ்வுக்கு வர முடியாதவா்களுக்காக ஞாயிற்றுக்கிழமைகளில் நோ்முகத் தோ்வு நடத்தவுள்ளோம். தில்லியில் காற்று மாசுவைக் குறைக்கும் வகையில், இ-ரிக்ஷாக்களின் பயன்பாட்டை தில்லி அரசு ஊக்குவித்து வருகிறது. அதன்படி, இ-ரிக்ஷாக்களுக்கு ரூ.30 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com