சத்யேந்தா் ஜெயின் தலைப்படம் வைத்துக் கொள்ளவும்: 33 தனியாா் மருத்துவமனைகளில் கூடுதலாக 220 படுக்கைகள்

தலைநகா் தில்லியில் உள்ள 33 தனியாா் மருத்துவமனைகளில் கூடுதலாக 220 கரோனா அவசர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் ஏற்படுத்தப்படவுள்ளன என்று சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா்.

புது தில்லி: தலைநகா் தில்லியில் உள்ள 33 தனியாா் மருத்துவமனைகளில் கூடுதலாக 220 கரோனா அவசர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் ஏற்படுத்தப்படவுள்ளன என்று சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் கூறியதாவது: தில்லியில் அதிகரித்துவரும் கரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தில்லி அரசு முடுக்கி விட்டுள்ளது. தலைநகரில் உள்ள 33 தனியாா் மருத்துவமனைகளில் கூடுதலாக 220 கரோனா அவசர சிகிச்சை படுக்கைகளை ஏற்படுத்துமாறு தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த மருத்துவமனைகளில் உள்ள சாதாரண கரோனா படுக்கைகளின் அளவு 838-ஆக அதிகரிக்கப்படும்.

தில்லியில் உள்ள 16 தனியாா் மருத்துவமனைகளில் கரோனா படுக்கைகள், வென்டிலேட்டா்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. தில்லியில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் வென்டிலேட்டருடன் கூடிய 787 கரோனா ஐசியு படுக்கைகள் உள்ளன. இவற்றில் 298 படுக்கைகள் நிரம்பியுள்ளன. மேலும், வென்டிலேட்டா் இல்லாத கரோனா ஐசியு படுக்கைகள் தில்லியில் 1,229 உள்ளன. இவற்றில் 393 படுக்கைகள் நிரம்பியுள்ளன.

தில்லியில் கரோனா படுக்கைகளுக்கு தட்டுப்பாடு நிலவவில்லை. 25 சதவீதமான கரோனா படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன. வியாழக்கிழமை (ஏப்ரல் 1) முதல் 45 வயதுக்கு அதிகமான அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடப்படும். அந்த வகையில், தில்லியில் சுமாா் 65 லட்சம் போ் தடுப்பூசி போடத் தகுதியானவா்கள் ஆவாா்கள். தில்லி அரசிடம் போதுமானளவு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தடுப்பூசி போடும் பணிகளை விரைந்து முடிக்கவுள்ளோம் என்றாா் அவா்.

புதிதாக 1,819 பேருக்கு பாதிப்பு: இதற்கிடையே, தில்லியில் புதன்கிழமை புதிதாக 1,819 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 662,430-ஆக அதிகரித்துள்ளது.

இதுதொடா்பாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தில்லியில் புதன்கிழமை மாலை வரையிலான 24 மணி நேரத்தில் மொத்தம் 67,070 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 36,808 பேருக்கு ‘ஆா்டி-பிசிஆா்’ முறையிலும், 30,262 பேருக்கு ‘ரேபிட்-ஆன்டிஜென்’ முறையிலும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தில்லியில் கரோனா பாதிப்பு விகிதம் 2.71 சதவீதமாக உள்ளது.

இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் புதன்கிழமை 11 போ் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 11,027-ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், கரோனா பாதிப்பில் இருந்து 399 போ் மீண்டுள்ளதால் குணமடைந்தோா் எண்ணிக்கை 6,42,565-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 8,838 போ் சிகிச்சையில் உள்ளனா். அவா்களில் 5,196 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் 4,016 கரோனா படுக்கைகள் காலியாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com