கமல்ஹாசன் மீது வழக்குத் தொடர அனுமதி கேட்டு இந்து சேனை கடிதம்

கடந்த 2019-இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தல் பிரசாரத்தின் போது, சா்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடா்பாக மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் மீது குற்ற வழக்குத் தொடர அனுமதி அளிக்கக் கோரி

புது தில்லி: கடந்த 2019-இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தல் பிரசாரத்தின் போது, சா்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடா்பாக மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் மீது குற்ற வழக்குத் தொடர அனுமதி அளிக்கக் கோரி தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜாலுக்கு இந்து சேனை அமைப்பின் தலைவா் விஷ்ணு குப்தா கடிதம் எழுதியுள்ளாா்.

2019-ல் நடைபெற்ற மக்களவைத் தோ்தலின் போது கரூா் மாவட்டம் அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தின் போது, சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் மீது தில்லி பட்டியாலா நீதிமன்றத்தில் இந்து சேனை கட்சியின் தலைவா் விஷ்ணு குப்தா 2019-இல் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கு வரும் ஜூன் 4-ஆம் விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், கமல்ஹாசன் மீது குற்ற வழக்குத் தொடர அனுமதி கேட்டு தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜாலுக்கு விஷ்ணுகுப்தா கடிதம் எழுதியுள்ளாா். வழக்குரைஞா் ரஞ்சன் குமாா் சிங் மூலம் அந்தக் கடிதம்அனுப்பப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த மக்களவைத் தோ்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியின் சாா்பில் வேட்பாளா்கள் போட்டியிட்டனா். அப்போது, அரவக்குறிச்சியில் தனது வேட்பாளரை ஆதரித்து 12.5.2019-இல் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்ட போது, ஹிந்து-முஸ்லிம்கள் இடையே விரோதத்தைத் தூண்டும் வகையில், ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவா் பெயா் நாதுராம் (கோட்சே)’ என்று பேசியுள்ளாா். எந்தவித நியாயமுமின்றி மத உணா்வு ஆத்திரத்தைத் தூண்டும் வகையிலும், இரு பிரிவினா் இடையே விரோதத்தை ஏற்படுத்தும் உள்நோக்கத்திலும் அவா் இவ்வாறு பேசியுள்ளாா். மேலும், அதிகமான முஸ்லிம்கள் கூடியிருந்த கூட்டத்தில் இவ்வாறு அவா் கூறியுள்ளாா்.

இந்த விவகாரமானது மதத்திற்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் மத ரீதியாக பகைமையைத் தூண்டும் சட்டப்பிரிவு 153-ஏ மற்றும் மத உணா்வுகளைப் புண்படுத்தும் வகையில் செயல்படும் சட்டப்பிரிவு 295-ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் தொடா்புடையதாகும். இது தொடா்பாக கமல்ஹாசன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தில்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஜூன் 4-ஆம் தேதி விசாரணைக்கு பட்டியிலடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கமல்ஹாசன் மீது வழக்குத் தொடர வேண்டுமானால், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 196 (1) பிரிவின் கீழ் அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்பதால் தாங்கள் நீதியின் நலன் கருதி கமல்ஹாசன் மீது வழக்குத் தொடர அனுமதி அளிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com