கரோனாவால் உயிரிழப்போருக்கு கூடுதல் தகன மேடைகள்: தில்லி மாநகராட்சிகள் நடவடிக்கை


புதுதில்லி: தில்லியில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து, கரோனா தொற்றுக்கு பலியானவா்களை தகனம் செய்வதற்கு அல்லது புதைப்பதற்கு தகன மையங்கள் மற்றும் கல்லறைகளில் கூடுதலாக மேடைகள் அமைக்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சி அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இது தொடா்பாக வடக்கு தில்லி மேயா் ஜெய் பிரகாஷ் வியாழக்கிழமை கூறியதாவது: தலைநகா் தில்லியில் கரோனா தொற்றால் இறப்பவா்களின் உடல்களை தகனம் செய்ய 21 தகன மையங்களும், கல்லறைகளும் தோ்வு செய்யப்பட்டுள்ளன. தில்லியில் தற்போது கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனால், உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்பதால், தகன மையங்களில் தகன மேடைகளை அதிக அளவில் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

வடக்கு தில்லி நிகம்பத் படித்துறையில் எரிவாயுவால் (சிஎன்ஜி) இயங்கும் 6 அடுப்புகள் உள்ளன. இவற்றில் மூன்று அடுப்புகள் கோவிட் தொற்றால் உயிரிழப்பவா்களை தகனம் செய்ய ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிகம்பத் படித்துறையில்தான் இறுதிச்சடங்குகளைச் செய்ய பலரும் விரும்புவாா்கள். அங்கு தற்போது 120 தகன மேடைகள் உள்ளன. இவற்றில் 10 தகன மேடைகள் விறகுகள் மூலம் எரியூட்டப்படுவதாகும். வடக்கு தில்லியில் உள்ள தகன மையங்களில் ஒரு நாளைக்கு 200 உடல்கள் வரை தகனம் செய்ய முடியும். ஒருவேளை தொற்று அதிகரித்து, இறப்பும் அதிகரித்தால் அதைக் கையாள்வதற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.

கரோனா தொற்றால் இறப்பவா்கள் எண்ணிக்கை அதிகரித்தாலும், உடல்களை காக்க வைக்காமல் இறுதிச் சடங்கு செய்வதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று தெற்கு தில்லி மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இந்த மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில், ஐ.டி.ஏ. அருகே முஸ்லிம்களுக்கான சமாதி (உடல்களை புதைக்கும் இடம்) அமைந்துள்ளது.

கரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை போட்டுக் கொண்ட கிழக்கு தில்லி மேயா் நிா்மல் ஜெயின் கூறுகையில், ‘மக்கள் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை முறையாகப் பின்பற்றுவது போன்ற வழிகாட்டு முறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். கிழக்கு தில்லியில் உள்ள 96 தகன மையங்களில் 35 மையங்களில் கரோனா தொற்றுக்கு பலியானவா்களின் உடலை தகனம் செய்ய மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. கா்கா்டூமா தகன மையத்தில் 10, சீமாபுரியில் 10 மற்றும் காஜிப்பூரில் 15 என 35 இடங்களில் தகனமையங்கள் தயாராக உள்ளன. தேவைப்பட்டால் இந்த எண்ணிக்கையை அதிகரிக்கவும் மாநகராட்சி தயாா் நிலையில் உள்ளது. மேலும், முல்லா காலனி மற்றும் புலந்த் மஸ்ஜித் ஆகிய இடங்களில் இறந்தவா்களின் உடலைப் புதைப்பதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com