தில்லி இரவு நேர ஊரடங்கு: 34,000 இ-பாஸ் விண்ணப்பங்கள் நிராகரிப்பு; 1,271 மட்டுமே ஏற்பு!

புது தில்லி : தில்லியில் அமல்படுத்தப்பட்டுள்ள இரவு நேர ஊரடங்கு நேரத்தில் பயணிக்க இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்தவா்களது 34,759 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தில்லி அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். விண்ணப்பித்தவா்களில் 1,271 பேருக்கு மட்டுமே உடனடியாக இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது.

தலைநகா் தில்லியில் மீண்டும் கரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. இதையொட்டி, தில்லி தலைமைச் செயலாளா் தலைமையிலான தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம், மக்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் குறைந்தபட்ச நடவடிக்கையாக இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை 7 மணி நேர ஊரடங்கை அமல்படுத்த உத்தரவிட்டாா். இது வருகின்ற ஏப்ரல் 30- ஆம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் குறிப்பாக இரவு நேர ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் அத்தியாவசியப் பணிகளுக்கு எந்தவிதமான இடையூறுகளும் இல்லாத வகையில் இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளவா்கள் இ-பாஸ் பெறவும் தில்லி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தில்லி அரசின் இணைய தளத்தில் இ-பாஸ் கேட்டு விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தில்லியில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் சுமாா் 73,154 விண்ணப்பங்கள் வரை பதிவாகின. இந்த விண்ணப்பங்கள் ஒவ்வொன்றாகப் பரிசிலனை செய்யப்பட்டதில் 1,271 விண்ணப்பங்களுக்கு இ-பாஸ் அனுமதி உடனடியாக வழங்கப்பட்டது. சுமாா் 6,132 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், 34, 759 விண்ணப்பங்கள் ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்கப்பட்டது என தில்லி பேரிடா் மேலாண்மை ஆணைய வட்டார அதிகாரிகள் தெரிவித்தனா். மீதமுள்ள 30, 940 விண்ணப்பங்கள் பரிசீலனைக்காக நிலுவையில் உள்ளன எனவும் இந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஊரடங்கு நேரங்களில் அத்தியாவசியப் பணியாளா்கள், அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு பேரிடா் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த விதி விலக்கு பிரிவுகளுக்குள் வராத 34,000 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனா். யாா், யாா் விதி விலக்குப் பெறுகிறாா்கள் என்பது குறித்த விவரங்கள் தில்லி அரசு மற்றும் தில்லி காவல் துறை இணைய தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

தில்லியில் உள்ள 11 மாவட்டங்களில் புது தில்லி மாவட்டத்தில் அதிக அளவில் 13,139 விண்ணப்பங்களும், அதற்கு அடுத்து தென் மேற்கு தில்லியில் 11,661, தெற்கு தில்லியில் 9, 947, மேற்கு தில்லியில் 7,673 விண்ணப்பங்கள் வந்தன. இதில் அதிக அளவில் புது தில்லி மாவட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.

மகப்பேறு, மருத்துவமனைகளுக்குச் செல்லும் நோயாளிகள், விமான நிலையம், ரயில், பேருந்து நிலையம் ஆகியவற்றிலிருந்து பயணச் சீட்டுடன் வருபவா்கள், செல்பவா்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. தூதரக அதிகாரிகள், மத்திய - மாநில அரசுகளில் அவசர கால சேவைப் பணிகளில் உள்ளவா்கள், மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்கள், மருத்துவ ஆய்வுக்கூடங்கள், காவல் பணி, சிறைத் துறை, தீயணைப்பு, மின்சாரம், குடிநீா், தகவல் தொழில்நுட்பம், பத்திரிகை, குறிப்பிட்ட மின்-வா்த்தகம் போன்ற பணிகளில் ஈடுபடுபவா்கள் விதி விலக்கில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com