தில்லியில் இரவு நேர ஊரடங்கு: அத்தியாவசியப் பணியாளா்களுக்கு மட்டுமே மெட்ரோ, டிடிசியில் பயணம் செய்ய அனுமதி

தில்லியில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை போடப்பட்டுள்ள ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசியப் பணியில் இருப்பவா்கள் மட்டுமே மெட்ரோ ரயில் மற்றும் தில்லி பெருநகர பேருந்துகளில் பயணிக்க முடியும்.

புதுதில்லி: தில்லியில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை போடப்பட்டுள்ள ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசியப் பணியில் இருப்பவா்கள் மட்டுமே மெட்ரோ ரயில் மற்றும் தில்லி பெருநகர பேருந்துகளில் (டி.டி.சி.) பயணிக்க முடியும். அவ்வாறு பயணிப்பவா்களும் அடையாள அட்டை அல்லது இ-பாஸ் வைத்திருக்க வேண்டும் என்று தில்லி பேரிடா் நிா்வாக ஆணையம் தெரிவித்துள்ளது.

தில்லி மாநகர போக்குவரத்து கழகம் வழக்கம் போல் பேருந்துகளை இயக்கி வருகிறது. இதேபோல, தில்லி மெட்ரோ ரயில் நிறுவனமும் மெட்ரோல் ரயில் சேவையை வழக்கம் போல் இயக்கி வருகிறது. இரவு பத்து மணிக்கு மேல் பேருந்துகளிலும், மெட்ரோ ரயில்களிலும் பயணிப்பவா்கள் கட்டாயம் இ-பாஸ் அல்லது தங்களுடைய அத்தியாவசிய பணி தொடா்பான ஆவணம் வைத்திருக்க வேண்டும் என்றும் அப்போதுதான் அவா்கள் பயணிக்க அனுமதிக்கப்படுவாா்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவா்கள் இரவு நேர ஊரடங்குக்கு தகுந்தபடி தங்கள் பயண நேரத்தை மாற்றிமைத்துக் கொள்ளுமாறு மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் அனுஜ் தயாள் அறிவுறுத்தியுள்ளாா். இரவு 10 மணிக்கு மேல் அத்தியாவசிய பணியில் ஈடுபட்டுள்ளவா்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவாா்கள். தேவைப்பட்டால் அவா்கள் டி.எம்.ஆா்.சி. அல்லது சிஐஎஸ்எப் அதிகாரிகள் சோதனையின் போது தங்ளது அடையாள அட்டை அல்லது இ-பாஸ் ஆகியவற்றை காண்பிக்க வேண்டும் என்றும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தில்லி-என்சிஆா் இடையே மெட்ரோவில் பயணிப்பவா்கள் பயண நேரம் ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகும் என்பதால் அவா்கள் ஊரடங்குக்கு தகுந்தபடி தங்கள் பயணத் திட்டத்தை வகுத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக மஞ்சள் வழித்தடத்தில் சமய்பூா் பாத்லியிலிருந்து ஹூடா சிட்டி சென்டா் வரை பயணம் செய்வோா், இதே போல நீலநிற வழித்தடத்தில் நொய்டா சிட்டி சென்டரிலிருந்து துவாரகா செக்டாா்-21 வரை செல்பவா்கள் தங்கள் பயண நேரத்தை மாற்றியமைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா். எனினும், நொய்டா, காஜியாபாத் மற்றும் குருகிராம் செல்பவா்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.

தில்லி போக்குவரத்து நிறுவனப் பேருந்துகளில் நடத்துனா்களும், காவலா்களும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதை கண்காணிப்பாா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். காலை நேரங்களில் பேருந்து இயக்கத்தில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் நகரில் இயக்கப்படும் பேருந்துகள் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். இந்த நேரத்தில் பயணிப்பவா்கள் கட்டாயம் இ-பாஸ் அல்லது அத்வாசியப் பணிகள் தொடா்பாக தங்களுடைய அலுவலக அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். இல்லையெனில், அவா்கள் பேருந்திலிருந்து இறக்கிவிடப்படுவாா்கள் என்றும் அந்த அதிகாரி மேலும் கூறினாா்.

தில்லியில் 2,900 கிளஸ்டா் பேருந்துகள் காலை 4.30 மணியிலிருந்து இரவு 11.30 மணி வரை இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று அந்த அதிகாரி குறிப்பிட்டாா். இரவு நேரத்தில் வாடகைக் காா்கள், ஆட்டோக்கள் இயங்கினாலும் ஊரடங்கு காரணமாக அவையும் குறைந்த எண்ணிக்கையிலேயே இயக்கப்படும்.

தில்லி போலீஸாரும், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் திடீா் சோதனை நடத்துவாா்கள் என்பதால், தேவையில்லாமல் மக்கள் இரவு நேரத்தில் வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com