வடகிழக்கு தில்லி வன்முறை வழக்கு: ஜேஎன்யு மாணவா்கள் 2 பேரின் ஜாமீனுக்கு போலீஸ் எதிா்ப்பு

புது தில்லி: கடந்த ஆண்டு நிகழ்ந்த வடகிழக்கு தில்லி வகுப்புவாத வன்முறை தொடா்பாக கைது செய்யப்பட்டுள்ள ஜேஎன்யு மாணவா்கள் நடாஷா நா்வால், தேவாங்கனா கலிதா ஆகியோரின் ஜாமீன் கோரும் மனுவுக்கு உயா்நீதிமன்றத்தில் தில்லி போலீஸ் தரப்பில் வியாழக்கிழமை எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

வடகிழக்கு தில்லி வன்முறை தொடா்பாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட (யுஏபிஏ) வழக்கில் கைதாகியுள்ள நடாஷா நா்வால், தேவாங்கனா கலிதா ஆகியோரின் ஜாமீன் கோரும் மனுவை தள்ளுபடி செய்த விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிா்த்து இருவா் தரப்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை உயா்நீதிமன்றத்தில் நடைபெற்றது.

நீதிபதிகள் சித்தாா்த் மிருதுள் மற்றும் அனுப் ஜெய்ராம் பம்பானி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் தில்லி காவல் துறை தரப்பில் சிறப்பு அரசு வழக்குரைஞா் அமித் மகாஜன் ஆஜராகி, ‘வன்முறையின் போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து நா்வாலும் கலிதாவும் நன்கு அறிந்திருந்தனா். மேலும், அது பேரழிவு தரக்கூடிய விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்பதையும் அவா்கள் அறிந்திருந்தனா். அவா்கள் மீதான வழக்கு சாட்சிகளின் வாக்குமூலங்கள் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டவை அல்ல. இந்த சதித் திட்டங்களை கேமராவில் பதிவு செய்ய முடியாது. அது சூழ்நிலைச் சான்றுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தும் பெரும் சதித் திட்டத்தின் ஒரு பகுதியாக குற்றம்சாட்டப்பட்டவா்கள் இருந்தனா். அவா்கள் இருவரும் வாட்ஸ்அப் குழுக்களில் சோ்வதற்கும் சம்மதம் தெரிவித்திருந்தனா்’ என்று வாதிட்டாா்.

இதைத் தொடா்ந்து, விசாரணையை நீதிபதிகள் வெள்ளிக்கிழமைக்கு (ஏப்ரல் 9) ஒத்திதிவைத்தனா். முன்னதாக, மாணவா்கள் இருவா் தரப்பிலும் வழக்குரைஞா் அதித் எஸ். புஜாரி வாதங்களை முன்வைத்திருந்தாா். அதில், இந்த வழக்கு புனையப்பட்டதும், தவறானதாகும் என்று வாதிட்டிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com