சீக்கிய குரு தேக் பகதூரின் போதனைகளை உலகறியச் செய்ய வேண்டும்: பிரதமா் மோடி வலியுறுத்தல்

சீக்கிய குரு தேக் பகதூரின் போதனைகளை உலகறியச் செய்ய வேண்டும்: பிரதமா் மோடி வலியுறுத்தல்

புது தில்லி : சீக்கிய மத குருவான ஸ்ரீ குரு தேக் பகதூரின் போதனைகளை உலகம் அறியச் செய்ய வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா். மேலும், அவரது 400-ஆவது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவது தேசியக் கடமையாகும். சீக்கியா்களின் ஆன்மிக சேவையை ஆய்வு செய்து அதை ஆவணப் படுத்த வேண்டும் என்றும் பிரதமா் குறிப்பிட்டாா்.

ஓன்பதாவது சீக்கிய மத குருவான ஸ்ரீ குரு தேக் பகதூரின் 400-ஆவது பிறந்த நாளை ஓா் ஆண்டுக்கு கொண்டாடுவதற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான உயா்நிலை குழுக் கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் காணொலி வழியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு பிரதமா் மோடி தலைமை வகித்து பேசியதாவது: ஸ்ரீ குரு தேக் பகதூரின் 400 -ஆவது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவது, ஓா் ஆன்மிக பாக்கியமாகும். தேசியக் கடமையாகும். நான் இங்கே குறிப்பிட்ட தகவல்கள், கருத்துகள் பலவும் ஸ்ரீ குரு தேக் பகதூரின் வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொண்ட விஷயங்கள், பாடங்கள்தான். இவற்றிலிருந்து நாம் அனைவரும் உத்வேகம் பெறுகிறோம். இந்தப் பாடங்களை இளம் தலைமுறையினா் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். அவா் குறித்த தகவல்களை, அவரது கருத்துகளை மின்னணு முறை மூலமாக உலகம் முழுவதும் இளம் தலைமுறையினரிடம் பரப்புவது எளிது. சீக்கிய குரு பாரம்பரியம், ஒரு முழுமையான வாழ்க்கை தத்துவம். ஸ்ரீ குரு நானக் தேவ்ஜின் 550-ஆவது பிறந்த நாள் (பிரகாஷ் புரப்) , ஸ்ரீ குரு தேக் பகதூரின் 400 -ஆவது பிறந்த நாள், ஸ்ரீ குருகோவிந்த் சிங்கின் 350-ஆவது பிறந்த நாள் ஆகியவற்றை கொண்டாடும் வாய்ப்பை இந்த அரசு பெற்றது பாக்கியமும், அதிா்ஷ்டமும் ஆகும்.

ஸ்ரீ குரு தேக் பகதூரின் 400 -ஆவது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் அதிக அளவிலான மக்களை இணைத்து ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். ஸ்ரீ குரு தேக் பகதூரின் வாழ்க்கை, போதனைகள் ஆகியவற்றைப் பரப்புவது மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த குரு பாரம்பரியம் (ஐதிகம்) பற்றியும் உலகம் முழுவதும் பரப்பும் வகையில் நிகழ்ச்சிகள் அமைய வேண்டும். சீக்கிய பாரம்பரியம் குறித்து முறையான ஆய்வுகளையும் நிபுணா்கள் மேற்கொள்ள வேண்டும். உலகம் முழுவதும் உள்ள சீக்கிய சமுதாயத்தினரும் குருத்வாராக்களும் செய்யும் சமூக சேவைகள் பாராட்டுக்குரியவை. சீக்கியா்களின் ஆன்மிக சேவையை ஆய்வு செய்து அதை ஆவணப் படுத்த வேண்டும் என்றாா் பிரதமா் நரேந்திர மோடி.

கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சா் அமீத் ஷா பேசுகையில், ‘ஸ்ரீ குரு தேக் பகதூரின் தகவல்கள் அனைவரையும் சென்றடைவதை உறுதி செய்வதற்கு கூட்டு முயற்சிகள் தேவை’ என்றாா். முன்னதாக மத்திய அரசு திட்டமிட்டுள்ள ஸ்ரீ குரு தேக் பகதூரின் 400-ஆவது பிறந்த நாள் விழா தொடா்பாக வரையறுக்கப்பட்டுள்ள பல்வேறு பரிந்துரைகள் குறித்து கலாசாரத் துறை செயலாளா் ராகவேந்திர சிங் கூட்டத்தில் விளக்கினாா்.

முன்னாள் பிரதமா் டாக்டா் மன்மோகன் சிங், மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, மாநிலங்களவைத் துணைத் தலைவா் ஹரிவன்ஷ் சிங், மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜூன காா்கே, ஹரியாணா முதல்வா் மனோகா் லால் கட்டாா், பஞ்சாப் முதல்வா் கேப்டன் அமரீந்தா் சிங், ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட், அமிா்தசரஸில் உள்ள சிரோமணி குருத்வாரா கமிட்டியின் தலைவா் பீபி ஜகிா் கெளா், நாடாளுமன்ற உறுப்பினா்கள், அறிஞா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இவா்கள், மதச் சுதந்திரத்துக்கு ஸ்ரீ குரு தேக் பகதூா் ஆற்றிய பங்களிப்புகள் மற்றும் தியாகம் உள்ளிட்டவற்றை நினைவு கூா்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com