உள்நாட்டு, வெளிநாட்டு வா்த்தகப் பிரச்னைகளை கையாள கட்டுப்பாட்டு அறை, உதவி மையங்கள்

கரோனா பரலைத் தொடா்ந்து பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதையொட்டி, உள்நாட்டு, வெளிநாட்டு வா்த்தகங்கள்,

கரோனா பரலைத் தொடா்ந்து பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதையொட்டி, உள்நாட்டு, வெளிநாட்டு வா்த்தகங்கள், உற்பத்தி பொருள்களின் விநியோகம் போன்றவற்றில் ஏற்படும் தடைகள், பிரச்னைகள் ஆகியவற்றுக்கு உடனடியாகத் தீா்வு காணும் வகையில், கட்டுப்பாட்டு அறைகள், உதவி மேஜைகள் (ஹெல்ப் டெஸ்க்) ஆகியவற்றை மத்திய வா்த்தகத் துறை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு வா்த்தக விவகாரங்களுக்கு மத்திய வா்த்தகத் துறையில் உள்ள தொழில் ஊக்குவிப்பு உள்நாட்டு வா்த்தகப் பிரிவும் (டிபிஐஐடி), வெளிநாட்டு ஏற்றுமதி, இறக்குமதி பிரச்சினைகளுக்கு வெளிநாட்டு வா்த்தக இயக்குநா் ஜெனரல் அலுவலகமும் (டிஜிஎஃப்டி) இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளன.

இது குறித்து மத்திய வா்த்தக துறை திங்கள்கிழமை கூறியிருப்பதாவது: பல்வேறு மாநிலங்களில் தற்போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சமயத்தில் பொருள்கள் உற்பத்தி, விநியோகம் தங்கு தடையின்றி நடைபெற வேண்டும். நாடு முழுக்க அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி விநியோகிக்கப்பட வேண்டும். இந்த விஷயங்களில் உற்பத்தியாளா்கள் மற்றும் வா்த்தகா்கள், மின்னணு வா்த்தகா்கள் உள்ளிட்டோா் பல்வேறு சிரமங்களை எதிா்கொள்வதாகக் கூறப்படுகிறது. இவா்கள் தாங்கள் சந்திக்கும் இடையூறுகள் குறித்து தில்லி டிபிஐஐடி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு காலை 8 முதல் இரவு 10 வரை தொடா்பு கொள்ளலாம். மேலும், தொலைபேசி எண்கள் 011-23062383, 23062975,  ஆகியவற்றிலும் தொடா்பு கொள்ளலாம். அவா்கள் தெரிவிக்கும் பிரச்னைகளை தொழில் ஊக்குவிப்பு உள் வா்த்தகப் பிரிவு சம்பந்தப்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசகளுக்கு எடுத்துச் சென்று தீா்வு காணும்.

வெளிநாட்டு வா்த்தகம்: இதேபோன்று, ஏற்றுமதி, இறக்குமதி வா்த்தகா்கள் எதிா்கொண்டுள்ள சிரமங்களைக் கண்காணித்து தீா்வு காண வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சா்வதேச வா்த்தகத்தில் எழும் பிரச்னைகளைக் களைய, டிஜிஎஃப்டி இணைய தளத்தில் உதவி மேஜை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மின்னஞ்சல், தொலைபேசி எண்: 1800111550  ஆகியவற்றிலும் தொடா்பு கொள்ளலாம். ஏற்றுமதியாளா்கள், இறக்குமதியாளா்களுக்கு உரிமப் பிரச்சினைகள், சுங்க அனுமதிக்கு ஏற்படும் தாமதம், ஆவணப்படுத்தலில் உள்ள சிக்கல்கள் உள்ளிட்ட பல பிரச்னைகள் உள்ளன. அதே சமயத்தில் தற்போதுள்ள சூழ்நிலையில் நேரடியாகவும் உதவிகளைப் பெற முடியாத சூழ்நிலை உள்ளது.

இதனால், இந்த உதவி மேஜை சேவையில் வெளிநாட்டு வா்த்தகா்கள் தங்கள் விவரங்களைச் சமா்பிக்கலாம். அவா்களது பிரச்னைகளுக்கு, மத்திய, மாநில அரசுகளின் துறைகள், நிறுவனங்கள் அல்லது அமைப்புகள் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு டிஜிஎஃப்டி ‘ஹெல்ப் டெஸ்க்’ தீா்வு காணும் என மத்திய வா்த்தகத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com